கடலின் காதலன்

Tuesday, July 7, 2009

மழையும் நானும் அல்லது அவளும்

எனக்கும் மழைக்குமான தொடர்பை நினைத்து பார்கிறேன் .என் முதல் மழைத்தொடர்பு எங்கு துளிர் விட்டதென்று நினைவில்லை .ஆனால் அம்மா சொல்வாள் நான் பிறந்த அன்று நல்ல மழையாம் .நான் பிறந்து வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் வெட்டாறு உடைத்துக்கொண்டுவிட்டதாம் ஊரே திருவாரூர் பெரிய கோவிலிலும் , கரைவீரம் கோவிலிலும் தண்ணீர் வடியும் வரை இருந்ததாம் .பேச்சு சுவாரஸ்யத்தில் அவ்வப்போது என்னிடமே பலமுறை சொல்லியிருக்கிறாள் அதனால் தான் எனக்கு கங்கா என்று பெயர் வைத்தாளாம் .

எதிர் வீட்டு அசோக்கின் அம்மா வீட்டில் தண்ணீர் நின்ற அளவை தூணில் குறித்து வைத்திருப்பதாய்சொல்வாள் .அவரவர்க்கென சில ஆட்டோகிராப்பை மழையும் வெள்ளமும் போட்டு விட்டுதான் போயிருக்கிறது .

எந்த மழையும் என் மீது துப்பி விட்டுச்செல்லும் ஞாபகத்துண்டுகள் சில மழைநாள் சம்பவங்களே .

பத்து வருடங்களுக்கு முன்பென்று நினைவு கனமழை பெய்த ஒரு இரவில் சத்யாவும் , மகேந்திரனும் ஓடிப்போனதும் எப்படியோ தேடிப்பிடித்து ஒருவாரத்தில் கொண்டு வந்து பிரித்துவைத்ததும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது .

இப்பொது அவன் பூ விற்று கொண்டிருக்கிறான் வேறு திருமணமாகி மூன்று குழந்தைகள்.அதற்கு முன்னமே சத்யாவுக்கு திருமணமானது அவளுக்கும் இப்பொது இரண்டு பெண் குழந்தைகள் நல்ல வேளை மகேந்திரன் சாயல் இல்லை .

எப்பொழுதென்று நினைவில்லை ஒரு நள்ளிரவு மழையில் மின்சாரம் நின்று விட்டிருந்தது . அதென்னமோ தெரியவில்லை மெல்லிய வெளிச்சத்தில் தான் தூக்கமே வந்து தொலைக்கிறது .விடிவிளக்கின்றி தூங்குவது ஒரு வித பயத்தையும் ,மூச்சுக்குழலை அடைத்து விட்டாற் போன்ற உணர்வையும் உண்டு பண்ணுவதை தடுக்க முடிவதே இல்லை .

பக்கத்தி படுத்துறங்கிய அம்மவைக்காணவில்லை . அம்மாவை அழைத்தபடி மெழுகு வர்த்தி எடுக்கும் நோக்கில் அடுப்பங்கரைக்கு போனேன் மெல்லியதாய் முனகலுடன் எதோ சப்தம் ,இருட்டிலும் எதோ அசைவுகள் . அரவம் கேட்டு அங்கிருந்து அம்மா அவசரமாய் புடவையை சரி செய்த படி எழுந்து வந்து எடுத்து கொடுத்தாள் . அதை ஏற்றி வைத்து விட்டு படுத்து கொண்டேன் சிறிது நேரத்திற் கெல்லாம் வந்தவள் படுத்துறங்கி விட்டாள். அந்த இரவு முழுவதும் நான் தூங்கவேஇல்லை .

மறு இரண்டு நாட்கள் அவளுடன் பேசாமலேயே இருந்தேன் . இப்போது நினைத்தால் சிரிப்பாய் வருகிறது . ஏனென்ற காரணமும் இப்போது , அப்போது சரி விளங்கியதாய் இல்லை ..

ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது

ஒரு மழையொழுகும் மாலையில் குடையெடுத்து செல்லாத தால் நனைந்து கொண்டே வர வேண்டியதாயிற்று ஐந்து மணிக்கெல்லாம் இருட்டியது போல் கரியை அப்பிக்கொண்டிருந்தது வானம் வரும் வழியில் சுடுகாட்டை தாண்டி ஒரு புளியமரத்தை கடந்து கொண்டிருந்தேன் எதிரே பார்வைக்கெட்டிய தூரத்திற்கப்பால் சட்டென்று ஒரு மின்னல் அதன் வாலைப்பிடித்துக் கொண்டே இடியும் தன் பங்குக்கு கத்தி விட்டிருந்த போது சுளீரென்று அடி வயிற்றில் ஒரு வலி , ஏதோ நழுவியது போல் . பல்லைக்கடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

மறுநாள் அம்மாஎன் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டாள்

இன்னமும் சொல்லிக்கொண்டு தானிருக்கிறாள்

" குண்டு மணி அளவுக்கு கூட தங்கம் வாங்க வக்கிலாத பயலுவோ

ஓடன் பொறந்த வளுக்கு செய்யாம அப்புடி என்னத்த தான் வாரி கட்டிட்டு போவப்போரனுவலோ " என்று

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் போனவருடம் கல்லூரி மைதானத்தில் சிறு மழைக்கிடையே அவன் கொடுத்த முத்தம் இன்னம் இருக்கிறது என் உதட்டிடுக்கில் .

ஆனாலும் என் முதல் மழைக்கான நினைவு இப்பவும் என்னிடம் இல்லை .

பி .கு .

அமெச்சூர் த்தனமான இந்த பதிவை தயவு செய்து பொறுத்துக்குங்க சாமியோவ்

"அட இதுதான் அம்மேச்சூர் நு நினைக்கிறியா நீ எழுதுறது எல்லாமே அம்மேச்சூர் தனமாத்தான் இருக்கு என்று பின்னூட்டமிடுவோர் வரவேற்கபடுகிறார்கள் "

9 comments:

அபுஅஃப்ஸர் said...

மழையும் அந்த இனிப்பான முத்தமும் இப்படி தலைப்பை வெச்சிருக்கலாம்

க்ளாஸ் சொல்லவைக்கும் உங்க எழுத்தும் அதன் சூழ்நிலை விளக்கமும் கலக்கல்

தொடருங்கள் பாலா

S.A. நவாஸுதீன் said...

கங்கையும் (கங்காவும்) மழையும் - ரொம்ப நல்லா இருக்கு பாலா. (ஒரு சில எழுத்துப்பிழைகளைத் தவிர. கிடைக்கிற கொஞ்ச நேரத்துல மிக நல்ல பதிவுகள் போடும்போது இது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல. கவிதை மட்டுமல்ல, கதையனுபவமும் கைவந்த கலைன்னு நிரூபிக்கும் படைப்பு.

நட்புடன் ஜமால் said...

நல்ல வேளை மகேந்திரன் சாயல் இல்லை .\\


ஹா ஹா ஹா

நல்ல இயல்பாய் பயணிக்க இயன்றது கதைக்குள் ...

நட்புடன் ஜமால் said...

போனவருடம் கல்லூரி மைதானத்தில் சிறு மழைக்கிடையே அவன் கொடுத்த முத்தம் இன்னம் இருக்கிறது என் உதட்டிடுக்கில் .ஆனாலும் என் முதல் மழைக்கான நினைவு இப்பவும் என்னிடம் இல்லை\\

முழு மேட்டரும் இங்கே இருப்பது போல் தெரிகின்றது...


(அமெச்சூரான எனது பின்னூட்டத்தை எப்பொழுதும் போல் மன்னித்து ஏற்று கொள்ளவும்(

ஆபிரகாம் said...

ஈரமான மழைநாட்களின் நினைவுகள்
இதுவும் ஒரு அ.பி தான்

பாலா said...

நன்றி அபு
வாங்க நவாஸ்
நன்றி ஜமால்
வாங்க ஆபிரகாம்

அ.மு.செய்யது said...

//சிறு மழைக்கிடையே அவன் கொடுத்த முத்தம் இன்னம் இருக்கிறது என் உதட்டிடுக்கில் .//

அது என்னவோ மழையோ மழை சம்பந்தமாக எத பத்தி நீங்க எழுதினாலும் பிடிக்கும்.

அது பாலா எழுதினா கேக்கவா வேணும் ??

பாலா said...

nandri seyathu
(aana poi sonna vaaikku pojanam kidaikkathunnu solluvaanga paarththukunga avlothaan solluven )

அ.மு.செய்யது said...

நான் பெரிதும் மதிக்கும் கவிஞர்களில் நீங்களும் ஒருவர்.

எனக்கு பிடிக்கலைன்னா "பிடிக்கலன்னு" வெளிப்படையாக சொல்வதில் எனக்கு யாதொரு சிரமமுமில்லை பாலா.