கடலின் காதலன்

Wednesday, June 23, 2010

மகாதனிமையில் சிதறும் கணம் !!

அன்பின் பெருநதி சுழித்துக்கொண்டோடும்
நிழற்பட பரப்பில் ..
ஹைபிஸ்கஸ் மலரின் ஒற்றைக்கோட்டு
ஓவியமென பறக்க எத்தனிக்கும்
நீர் பறவைகளின் கடற்பின்புல நிழல் .
விளம்பர செயல் மாதிரி காதல் இணை
உதடுகள் வழுக்க ஒன்றன் மேல் ஒன்றென .
விழிக்கோள ஆடியில் விழுங்கும்
எனக்கு ஏன் வலிக்க வேண்டும்
பெருந்தோளும் இதயமும் . ??


Sunday, June 20, 2010

அவனுக்கு

எச்சில் டம்ளர் கழுவியே ரேகை அழிந்தவனுக்கு
கழுவிய நீரிலேயே எதிர்காலம் தேடியவனுக்கு
வெந்நீர் ஆவியில் விடியலைக்கண்டவனுக்கு
சிகரெட்டில் வெந்த உதட்டுக்காரனுக்கு
சாராயத்தில் திளைப்பவனுக்கு
கடைச்சுவர்களுக்குள்ளேயே உலகம் கண்டுவிட்டவனுக்கு
புத்தகப்பையோடு என்னை வெள்ளநீரில் சுமந்தவனுக்கு
உழைக்க அஞ்சாதவனுக்கு
என் கோபத்தையும் ரசிப்பவனுக்கு
என் மூடத்தனத்தை பரிசளித்தவனுக்கு
ஒன்றுமறியா வெகுளித்தனக்காரனுக்கு
எனக்கான ஒற்றைக்கருவிற்கு ஓராயிரம் உயிரணுக்கள் ஈந்தவனுக்கு !
அவனுக்கு !
எங்கப்பனுக்கு !
..
அடேய் !! நரைத்த தாடிக்காரா மீசை துளிரா பருவத்துள் மீண்டும் நான் நுழைந்து உன் உள்ளங்கை சூட்டோடு உலகம் சுற்ற வேண்டுமடா !!!

நண்பர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்