கடலின் காதலன்

Monday, July 20, 2009

தலைப்பற்றவன்

அவனைப்பார்த்ததுண்டா நீங்கள் ?

முப்பது,முப்பத்தைந்து வருடங்கள்

முன்பு அவன் பிறந்திருக்ககூடும் !

உங்கள் தெருவில் ,ஊரில்

நகரத்தில் எங்கேனும் .

.

அவனைப்பார்த்திருப்பீர் நீங்கள்

அவன்தானவனென்று உங்களுக்கு

தெரிய வாய்ப்பில்லை .

.

நினைவு படுத்தி பாருங்கள்

"பழுப்பு நிற பற்கள்

செம்படைந்த தலை மயிர்

உள்நோக்கி வளைந்த கால்கள்

தரங்கிய உடல் "

அடையாளம்

.

மனப்பிறழ்ந்தவன்

உணவேயவன் தேவை

உங்கள் படிமம்

அவன்மீது

.

அவன் கனவுகள்

உடற்,மனத்தேவைகள்

அறிய விருப்பமில்லை ,நேரமில்லை

உங்களுக்கு .

அவனை மனித வட்டத்தினின்று

தூக்கி எறிந்திருக்கலாம் . (இல்லை )

அவனை மறந்தே போயிருக்கலாம்

பாதகமில்லை !!

.

என்றேனும் அவசரகதி வாழ்வில்

ஒருநாளவன் இறந்து போயிருப்பான்

அன்றும் நேரமிருக்காது உங்களுக்கும் எனக்கும் .!!!!

ஆகையால் புறப்பட்டுவிட்டேன் இதோ

.

அவனிருக்கும் போதேயவனுக்கு அஞ்சலி செலுத்த

"ஒரு உச்"

"இயன்றால் இருதுளி கண்ணீர் "

முடிந்தால் நீங்களும் வரலாம் ..........

Tuesday, July 14, 2009

"ஜே .ஜே சில குறிப்புகளும் " சில குறிப்புகளும்

முதலில் பதிவுலகத்திற்கு என் நன்றி. யாரோவொரு பிரபல பதிவர் (பெயர் ஞாபகமில்லை மன்னிக்கவும் ) பரிந்துரைத்திருந்தார் படிக்கவேண்டிய சில புத்தகங்களென அவருக்கும் .

இராஜராஜன் திருமண மண்டபத்தில்(திருவாரூர் ) ஜனவரி மாத புத்தக கண்காட்சியில் இதோடு சேர்த்து "ஒரு புளியமரத்தின் கதை , ஸீரோ டிகிரி,சிவகாமியின் சபதமும் வாங்கினேன் .அவை பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பகிரலாமென ......

ஜே ஜே சில குறிப்புகள் .
"ஜோசப் ஜேம்ஸ் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது ஜனவரி ஐந்தாம் தேதி தனது முப்பத்து ஒன்பதாம் வயதில் ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான் " இப்படி முதல் இரண்டு வரியிலேயே அவனைக் கொன்று போட்டு அத மேல் ஓடத் தொடங்குகிறது இந்த நாவல் அதனோடு ஓடியே ஆக வேண்டிய கட்டாயம் இல்லையேல் வேடிக்கை மட்டுமே பார்க்க இயலும் .
இப்படி சொன்னாலும் சில சமயம் எதோ ஒரு பக்கத்தை பிரித்து படிக்கும்போது மின்காந்த புலமென அப்படியே உள்ளிழுக்கும் தன்மை கொண்டதாயும் இருக்கிறது .
குறிப்புகள் என்றே சொல்வதால் வரிசைக்கிரமத்தை பார்க்க முடிவதில்லை
முதல் வரியில் இறந்தவன் நாவலின் இரண்டாம்பாகத்தின் முதல் வரியில் பிறக்கிறான் .இதெல்லாம் நாவலோடு ஓடியே ஜீரணித்து கொள்ளவேண்டியிருக்கிறது .
படித்துக்கொண்டிருக்கும் போதே வெளிவந்தது சுய மதிப்பீடுகளுக்குள் புகுந்து விடுகிறேன் காரணம் சுய மதிப்பீட்டிற்கான எண்ணங்களை புகுத்தி நம்மை வெளித்தள்ளிவிடுகிறது .
ஒரு பத்து ,பதினைந்து வரிகள் கொண்ட ஒரு பத்தி தோற்றுவிக்கும் எண்ணங்களும் பயணங்களும் விசாலமானவை .வார்த்தைகளில் சத்தும் , அடர்த்தியும் நிரம்பி வழிகிறது .
நாவல் முழுவதும் அவனை (ஜே.ஜே ) தூக்கி கொண்டாடியிருப்பது அழகாகவே ஒரு படைப்பாளியை கொண்டாடும் விதமும் அப்படியே .
.
நாவலிலிருந்து
"ஹோட்டேல் உரிமையாளருக்கும் பட்லர்களுக்கும் ஜே.ஜே மீது ஒரு தினுசான கவர்ச்சியும் அதிலிருந்து கிளர்ந்த அனுதாபமும் இருந்தன "மிக புத்திசாலியான பையித்தியம் " என்ற படிமமும் அவனைப்பற்றி நாளா வட்டத்தில் அவர்களிடம் உருவாகி இருந்தது ."

இரண்டாம் பாகத்தில் ஜே ஜே வின் டைரிக் குறிப்புகளாய் சொல்லப்படும் கிட்டத்தட்ட அறுபத்து ஐந்தும் தனித்தனி சிறுகதைகளாய் எழுதப்பட வேண்டியவை .
.
"நேற்று ஒரு கவிதையை மொழி பெயர்த்தேன் மூலத்தில் கனமாக இருந்தது என் தாய் மொழியில் கஞ்சித் தாள் மாதிரி பறக்க ஆரம்பித்து விட்டது .என்ன நேர்ந்தது அந்த கவிதைக்கு ? என் பாஷை அந்த கவிதையை என்ன செய்தது ? எந்த விதத்தில் அதை துன்புருத்திற்று ?"
இப்படி நீள்கிறது அந்த குறிப்பு

நாவலை முடித்தவுடன் ஜே ஜே இடம் ஆட்டோகிராப் வாங்கும் எண்ணம் மேலிடுவதை தடுக்க முடிவதில்லை .


இந்த நாவலை பதிவுலக நண்பர்கள் சிலருக்கு பரிந்துரை செய்தேன் யாரும் காதில் போட்டு கொண்டதாய் தெரியவில்லை .

மீண்டும் ஒருமுறை இதை படிக்க வேண்டுமென இருக்கிறேன் புதிதாய் எண்ணங்களும் வாசல்களும் கட்டாயம் திறக்கலாம் .

பி. கு
இந்த நாவலுக்கு பின்னரே தமிழிழும் , மலையாளத்திலும் (மொழி பெயர்ப்பு ) நவீன இலக்கியங்கள் வந்ததாய் சொல்லப்படுகிறது .
.

பிழை இருந்தால் பொறுத்தருள்க .Tuesday, July 7, 2009

மழையும் நானும் அல்லது அவளும்

எனக்கும் மழைக்குமான தொடர்பை நினைத்து பார்கிறேன் .என் முதல் மழைத்தொடர்பு எங்கு துளிர் விட்டதென்று நினைவில்லை .ஆனால் அம்மா சொல்வாள் நான் பிறந்த அன்று நல்ல மழையாம் .நான் பிறந்து வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் வெட்டாறு உடைத்துக்கொண்டுவிட்டதாம் ஊரே திருவாரூர் பெரிய கோவிலிலும் , கரைவீரம் கோவிலிலும் தண்ணீர் வடியும் வரை இருந்ததாம் .பேச்சு சுவாரஸ்யத்தில் அவ்வப்போது என்னிடமே பலமுறை சொல்லியிருக்கிறாள் அதனால் தான் எனக்கு கங்கா என்று பெயர் வைத்தாளாம் .

எதிர் வீட்டு அசோக்கின் அம்மா வீட்டில் தண்ணீர் நின்ற அளவை தூணில் குறித்து வைத்திருப்பதாய்சொல்வாள் .அவரவர்க்கென சில ஆட்டோகிராப்பை மழையும் வெள்ளமும் போட்டு விட்டுதான் போயிருக்கிறது .

எந்த மழையும் என் மீது துப்பி விட்டுச்செல்லும் ஞாபகத்துண்டுகள் சில மழைநாள் சம்பவங்களே .

பத்து வருடங்களுக்கு முன்பென்று நினைவு கனமழை பெய்த ஒரு இரவில் சத்யாவும் , மகேந்திரனும் ஓடிப்போனதும் எப்படியோ தேடிப்பிடித்து ஒருவாரத்தில் கொண்டு வந்து பிரித்துவைத்ததும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது .

இப்பொது அவன் பூ விற்று கொண்டிருக்கிறான் வேறு திருமணமாகி மூன்று குழந்தைகள்.அதற்கு முன்னமே சத்யாவுக்கு திருமணமானது அவளுக்கும் இப்பொது இரண்டு பெண் குழந்தைகள் நல்ல வேளை மகேந்திரன் சாயல் இல்லை .

எப்பொழுதென்று நினைவில்லை ஒரு நள்ளிரவு மழையில் மின்சாரம் நின்று விட்டிருந்தது . அதென்னமோ தெரியவில்லை மெல்லிய வெளிச்சத்தில் தான் தூக்கமே வந்து தொலைக்கிறது .விடிவிளக்கின்றி தூங்குவது ஒரு வித பயத்தையும் ,மூச்சுக்குழலை அடைத்து விட்டாற் போன்ற உணர்வையும் உண்டு பண்ணுவதை தடுக்க முடிவதே இல்லை .

பக்கத்தி படுத்துறங்கிய அம்மவைக்காணவில்லை . அம்மாவை அழைத்தபடி மெழுகு வர்த்தி எடுக்கும் நோக்கில் அடுப்பங்கரைக்கு போனேன் மெல்லியதாய் முனகலுடன் எதோ சப்தம் ,இருட்டிலும் எதோ அசைவுகள் . அரவம் கேட்டு அங்கிருந்து அம்மா அவசரமாய் புடவையை சரி செய்த படி எழுந்து வந்து எடுத்து கொடுத்தாள் . அதை ஏற்றி வைத்து விட்டு படுத்து கொண்டேன் சிறிது நேரத்திற் கெல்லாம் வந்தவள் படுத்துறங்கி விட்டாள். அந்த இரவு முழுவதும் நான் தூங்கவேஇல்லை .

மறு இரண்டு நாட்கள் அவளுடன் பேசாமலேயே இருந்தேன் . இப்போது நினைத்தால் சிரிப்பாய் வருகிறது . ஏனென்ற காரணமும் இப்போது , அப்போது சரி விளங்கியதாய் இல்லை ..

ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது

ஒரு மழையொழுகும் மாலையில் குடையெடுத்து செல்லாத தால் நனைந்து கொண்டே வர வேண்டியதாயிற்று ஐந்து மணிக்கெல்லாம் இருட்டியது போல் கரியை அப்பிக்கொண்டிருந்தது வானம் வரும் வழியில் சுடுகாட்டை தாண்டி ஒரு புளியமரத்தை கடந்து கொண்டிருந்தேன் எதிரே பார்வைக்கெட்டிய தூரத்திற்கப்பால் சட்டென்று ஒரு மின்னல் அதன் வாலைப்பிடித்துக் கொண்டே இடியும் தன் பங்குக்கு கத்தி விட்டிருந்த போது சுளீரென்று அடி வயிற்றில் ஒரு வலி , ஏதோ நழுவியது போல் . பல்லைக்கடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

மறுநாள் அம்மாஎன் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டாள்

இன்னமும் சொல்லிக்கொண்டு தானிருக்கிறாள்

" குண்டு மணி அளவுக்கு கூட தங்கம் வாங்க வக்கிலாத பயலுவோ

ஓடன் பொறந்த வளுக்கு செய்யாம அப்புடி என்னத்த தான் வாரி கட்டிட்டு போவப்போரனுவலோ " என்று

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் போனவருடம் கல்லூரி மைதானத்தில் சிறு மழைக்கிடையே அவன் கொடுத்த முத்தம் இன்னம் இருக்கிறது என் உதட்டிடுக்கில் .

ஆனாலும் என் முதல் மழைக்கான நினைவு இப்பவும் என்னிடம் இல்லை .

பி .கு .

அமெச்சூர் த்தனமான இந்த பதிவை தயவு செய்து பொறுத்துக்குங்க சாமியோவ்

"அட இதுதான் அம்மேச்சூர் நு நினைக்கிறியா நீ எழுதுறது எல்லாமே அம்மேச்சூர் தனமாத்தான் இருக்கு என்று பின்னூட்டமிடுவோர் வரவேற்கபடுகிறார்கள் "

Friday, July 3, 2009

எதிர்நிலையிரவு

வழமையாய் அழைப்பு துளிர்க்கும்

முனை வழமையாய் இல்லை

தேவைக்கு இறைஞ்சியோ ,வன்செயலோ

அதற்கு தேவையாய் இல்லை

அதொரு எதிர் நிலையிரவு ஆதலின் !!!

.

.

கொழுவை நிலம் உழுதல் !

வண்ணப்பூச்சியை மலர் குடித்தல் !

விறகு தீயை எரித்தல் !

சாத்தியம் !! ம்ம் !!!!!!

அதொரு எதிர்நிலையிரவு ஆதலின் !

.

.

எதிர் முனையில் வளர்ந்து விட்ட அழைப்பிதளால்

எங்கும் எதிர் நிலை !

எதிலும் எதிர் நிலை !

நிலையும் எதிர் நிலை !

கட்டுடைப்பு

ஆதலின் அதொரு எதிர்நிலையிரவு !

.

.

ஆணாதிக்கம் தொடங்குமிடம்

இப்போது தலைகீழாய்

இங்கது உடையும் தருணம்

வேறெங்குமது உடைவதற்காய் அவசியமிராது

ஆதலின் அதொரு எதிர் நிலையிரவு !

.

.

அவளின் ஆதிக்கம் உச்சத்தில்

நான் பெண்மையை அணிந்திருந்தேன் ?!!!!!

அவளுக்கு மீசை முளைத்து விட்டிருந்தது ?!!!!

என் சிறந்த இரவுகளில் அதுவும் .

ஆதலின் அதொரு எதிர் நிலையிரவு ............