கடலின் காதலன்

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, April 2, 2010

ருத்ராபதி ஆசிரியர்


உன்மத்தம் பீடித்தநிலை இறைதரிசன அணுக்கமென்றே விழைகிறேன் .வாழ்வின் அந்திமகால வாசலிலும் பற்றியும் பற்றா குடுவையுள் ரசத்தன்மை எளிதில் யார்க்கும் வாய்ப்பதில்லை.அந்த பித்து பிடித்த மனிதனோடு கொண்டாடுவதில் நானும் பித்தனாவதில் மகிழ்ச்சியன்றி வேறென்ன?
ருத்ராபதி ஆசிரியர் இறந்தாரெனும் செய்தியின் நிதர்சன வலி இன்னமும் சிறிதளவேனும் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது .
எனக்கான இறைதேடல் சிற்பங்கள் அறையப்பெற்ற கோயில்களில் இல்லைதானென்றாலும் அதன் சப்த அதிர்வுகள் ,வாத்தியங்களின் ஒலியமைதி , மதில்களுக்கப்பாலேயே தீண்டாமை சாபம் பெற்ற நகரிய இரைச்சல் மாசுகளுக்கென்றே பொழுது போக்கின் தலமாக கோயில்களை நான் தேர்ந்ததில் ஆச்சர்யமொன்றுமில்லை . பார்க்கலாமங்கே ஆசிரியரை ஒற்றைப் பச்சைத்துண்டு என்றோ சால்வைஎன்றோ தெரிய மார்புவரை கட்டிய அவ்வொற்றை ஆடையில் நீறு பட்டையில் தேவாரம் , அருட்பா,அந்தாதியுடன் .
இதென்ன காதேலென்று தெரிவதில்லை முழுமூச்சாய் பாடலை மனனம் செய்து சிலைமுன் மன்னிக்க கடவுள் முன் கொட்டித்தீர்த்தல் .இதுவென்ன? என்னிடமும் புத்தகத்தோடு சரிபார்க்க சொல்லி ஒப்புவித்தாலும் கிடைக்கப்பெறும் அதிசயம் !. அவரோடான நட்பியம் எழுத்தென்ற
புள்ளியில் தான் நிகழப்பட்டிருக்கவேண்டும் .அரைகுறையாய் வாசிக்க தொடங்கிய காலங்களில் ( இப்ப மட்டும் ??? ) எழுத்தின் கிளர்ச்சியில் புணரும் வேட்கையொத்த எங்கேனும் பகிர்ந்து தீர்க்க வாய்க்கும் மனம் அவரானது .இந்த நேர்கையில் வறுமைக்கு பண்டமாற்றாய் மதமளிக்கும் பறங்கிய மதவியாபாரிகள் போல் என்னுள் அருட்பா திணிக்கும் சாமர்த்தியம் மெச்சத்தக்கது.பொதுவில் விடய அரட்டை தருணங்களில் எதிர்வாதம் செய்ய எவ்வொருவரையும் அவ்வளவு எளிதில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை . இவ்விடயத்தில் நான் நேசிக்கும் முட்டாள் தனம் மிகும் மனிதர் நிற்க.
தனிமைக் கொடும்முயக்கம் பெற்று உப்புத் தென்றலில் மரத்த உடலோடு கடலோடியாய் சிதைமாறிய பின் வீடு திரும்பும் நாட்களிலும் தனிமையோடான விபச்சாரத்திற்கென்றே அலையத்தொடங்கி வறண்ட நன்செய் நிலங்களில் பித்தொடு திறியும்தருணங்களிலெல்லாம் அவரைக்காண நேரும் தரை மேயும் மாட்டின் தும்போடு அதே பாசுரங்கள் ,மனனம் இத்தியாதி இத்யாதிகள்.
எம் .ஏ தமிழ் படித்து தலைமையாசிரியராய் ஓய்வு பெற்ற பகட்டு வேடம் பூணா அக்குழந்தைமை குணாதிசயத்திற்கென்றே மனைவி அமைந்தது :((
அம்மாவும் (அம்மாக்களின்) பழைய வருத்த சுய புராணங்களின் ஊடே சொல்லியிருக்கிறாள் ருத்ராபதி ஆசிரியரின் இளமைகால துன்பியல் நிகழ்வுகளை.
குரூரமும் ,கயமையும்,வேசித்தனமும் மிகும் எதையோ விழாமல் பற்றிகொள்ளும் பிரயத்தனமாய் இறுக்கமான யதார்த்தவாதிகளின் கேலிப்புன்னகை அதியதார்த்த அப்பித்து நிலை மனிதன் மீது வீசப்படும் நிகழ்வுகளில் நினைத்து கொள்கிறேன் எனக்கான இப்போன்ற கேலிச்சிரிப்பு உங்கள் உதடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று அந்நாளுக்கான கொண்டாட்டங்களை சேமித்தபடி.
அவரின் இடுகாட்டு பயணத்திற்கான ஒரு தோள் எனக்கானது சுடுகாட்டு சாம்பல் பொட்டலில் இறக்குகையில் தோளோடு சேர்த்து வலித்தது. ச்சே!இந்த பாழாய் போன கண்ணீர் சொட்டேனும் வரமறுக்கிறது...
இனி யாளியின் நாவை வெண்கலத்தில் கொண்ட ஆலயமணியதிர்வு நினைவுறுத்தும் அப்பரையும் ,பட்டரையும்
வள்ளலாரையும் அவ்வாசிரியக்குரலோடு !!!!!

Tuesday, July 7, 2009

மழையும் நானும் அல்லது அவளும்

எனக்கும் மழைக்குமான தொடர்பை நினைத்து பார்கிறேன் .என் முதல் மழைத்தொடர்பு எங்கு துளிர் விட்டதென்று நினைவில்லை .ஆனால் அம்மா சொல்வாள் நான் பிறந்த அன்று நல்ல மழையாம் .நான் பிறந்து வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் வெட்டாறு உடைத்துக்கொண்டுவிட்டதாம் ஊரே திருவாரூர் பெரிய கோவிலிலும் , கரைவீரம் கோவிலிலும் தண்ணீர் வடியும் வரை இருந்ததாம் .பேச்சு சுவாரஸ்யத்தில் அவ்வப்போது என்னிடமே பலமுறை சொல்லியிருக்கிறாள் அதனால் தான் எனக்கு கங்கா என்று பெயர் வைத்தாளாம் .

எதிர் வீட்டு அசோக்கின் அம்மா வீட்டில் தண்ணீர் நின்ற அளவை தூணில் குறித்து வைத்திருப்பதாய்சொல்வாள் .அவரவர்க்கென சில ஆட்டோகிராப்பை மழையும் வெள்ளமும் போட்டு விட்டுதான் போயிருக்கிறது .

எந்த மழையும் என் மீது துப்பி விட்டுச்செல்லும் ஞாபகத்துண்டுகள் சில மழைநாள் சம்பவங்களே .

பத்து வருடங்களுக்கு முன்பென்று நினைவு கனமழை பெய்த ஒரு இரவில் சத்யாவும் , மகேந்திரனும் ஓடிப்போனதும் எப்படியோ தேடிப்பிடித்து ஒருவாரத்தில் கொண்டு வந்து பிரித்துவைத்ததும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது .

இப்பொது அவன் பூ விற்று கொண்டிருக்கிறான் வேறு திருமணமாகி மூன்று குழந்தைகள்.அதற்கு முன்னமே சத்யாவுக்கு திருமணமானது அவளுக்கும் இப்பொது இரண்டு பெண் குழந்தைகள் நல்ல வேளை மகேந்திரன் சாயல் இல்லை .

எப்பொழுதென்று நினைவில்லை ஒரு நள்ளிரவு மழையில் மின்சாரம் நின்று விட்டிருந்தது . அதென்னமோ தெரியவில்லை மெல்லிய வெளிச்சத்தில் தான் தூக்கமே வந்து தொலைக்கிறது .விடிவிளக்கின்றி தூங்குவது ஒரு வித பயத்தையும் ,மூச்சுக்குழலை அடைத்து விட்டாற் போன்ற உணர்வையும் உண்டு பண்ணுவதை தடுக்க முடிவதே இல்லை .

பக்கத்தி படுத்துறங்கிய அம்மவைக்காணவில்லை . அம்மாவை அழைத்தபடி மெழுகு வர்த்தி எடுக்கும் நோக்கில் அடுப்பங்கரைக்கு போனேன் மெல்லியதாய் முனகலுடன் எதோ சப்தம் ,இருட்டிலும் எதோ அசைவுகள் . அரவம் கேட்டு அங்கிருந்து அம்மா அவசரமாய் புடவையை சரி செய்த படி எழுந்து வந்து எடுத்து கொடுத்தாள் . அதை ஏற்றி வைத்து விட்டு படுத்து கொண்டேன் சிறிது நேரத்திற் கெல்லாம் வந்தவள் படுத்துறங்கி விட்டாள். அந்த இரவு முழுவதும் நான் தூங்கவேஇல்லை .

மறு இரண்டு நாட்கள் அவளுடன் பேசாமலேயே இருந்தேன் . இப்போது நினைத்தால் சிரிப்பாய் வருகிறது . ஏனென்ற காரணமும் இப்போது , அப்போது சரி விளங்கியதாய் இல்லை ..

ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது

ஒரு மழையொழுகும் மாலையில் குடையெடுத்து செல்லாத தால் நனைந்து கொண்டே வர வேண்டியதாயிற்று ஐந்து மணிக்கெல்லாம் இருட்டியது போல் கரியை அப்பிக்கொண்டிருந்தது வானம் வரும் வழியில் சுடுகாட்டை தாண்டி ஒரு புளியமரத்தை கடந்து கொண்டிருந்தேன் எதிரே பார்வைக்கெட்டிய தூரத்திற்கப்பால் சட்டென்று ஒரு மின்னல் அதன் வாலைப்பிடித்துக் கொண்டே இடியும் தன் பங்குக்கு கத்தி விட்டிருந்த போது சுளீரென்று அடி வயிற்றில் ஒரு வலி , ஏதோ நழுவியது போல் . பல்லைக்கடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

மறுநாள் அம்மாஎன் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டாள்

இன்னமும் சொல்லிக்கொண்டு தானிருக்கிறாள்

" குண்டு மணி அளவுக்கு கூட தங்கம் வாங்க வக்கிலாத பயலுவோ

ஓடன் பொறந்த வளுக்கு செய்யாம அப்புடி என்னத்த தான் வாரி கட்டிட்டு போவப்போரனுவலோ " என்று

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் போனவருடம் கல்லூரி மைதானத்தில் சிறு மழைக்கிடையே அவன் கொடுத்த முத்தம் இன்னம் இருக்கிறது என் உதட்டிடுக்கில் .

ஆனாலும் என் முதல் மழைக்கான நினைவு இப்பவும் என்னிடம் இல்லை .

பி .கு .

அமெச்சூர் த்தனமான இந்த பதிவை தயவு செய்து பொறுத்துக்குங்க சாமியோவ்

"அட இதுதான் அம்மேச்சூர் நு நினைக்கிறியா நீ எழுதுறது எல்லாமே அம்மேச்சூர் தனமாத்தான் இருக்கு என்று பின்னூட்டமிடுவோர் வரவேற்கபடுகிறார்கள் "