கடலின் காதலன்

Saturday, November 28, 2009

வளிமம்

அறை அபிஷேகிக்கும் மின்னிறகு

துண்டாடிய காற்றுடல் .

.

முடிவிலியில் ஆரத்தழுவியும்

இதற்தின்றும் தீரவில்லை

காற்றின் தாய்பசி .

.

இனவிருத்திக்கும் முயக்கவீச்சில்

இறந்த எதிர்பாலொத்து

பச்சைய உடலங்கள் கொலைத்த

கடல் முகிழ் வெற்றிடந்தேடும்

ராட்சத சுவாசம் .

.

மொழிஞன் பிரசவிக்கும் சொற்களாய்

வனமடைந்து திரும்பும் வாசவளி .

.

"வளியிடை போழப்படா முயக்கு "(வள்ளுவம் )

தேடுமவள்

உடைஎரிக்கும் துணையற்ற

பின்னிரவின் நாசி நவில்

கரியமில வளிமம் .

Sunday, November 1, 2009

வெயில்

நிலவிலங்கின் வாய்ப்பிளந்த

குறிகளுக்குள் துழாவுகின்றன

சூர்ய நாவுகள்

.

இலையுதிர்த்து அழுது

யாசிக்கின்றன வானுலோபியை

வறண்ட பின்னும் தரை உறிஞ்சும்

முதலிய(ம்) மரங்கள்

.

தவிட்டின் வர்ணக் குருவிகள்

என்பற்ற புழுக்கள் தேடி

புண்படுகின்றன மரவேர்கள் .

.

வாகனக்கண்கள் புசிக்கப்

- பெறும் தார்ச்சாலையின்

காட்சிமயக்க நீர்மம் .

.

காய்ந்து வெடித்த அவளுதடுகண்டு

சபிக்கிறான் அம்பிகாபதி வழி

வந்தவன் .

.

உழவப்பாட்டன் தோல் நக்கிய

வெக்கை வளிமம் உமிழ் நெற்றி

வியர்வை உண்டபின் துடிக்கிறது

நிலக்குறி ..... ஆண்மையற்ற

வெண்மேகம் கண்டு .......................