கடலின் காதலன்

Friday, April 2, 2010

ருத்ராபதி ஆசிரியர்


உன்மத்தம் பீடித்தநிலை இறைதரிசன அணுக்கமென்றே விழைகிறேன் .வாழ்வின் அந்திமகால வாசலிலும் பற்றியும் பற்றா குடுவையுள் ரசத்தன்மை எளிதில் யார்க்கும் வாய்ப்பதில்லை.அந்த பித்து பிடித்த மனிதனோடு கொண்டாடுவதில் நானும் பித்தனாவதில் மகிழ்ச்சியன்றி வேறென்ன?
ருத்ராபதி ஆசிரியர் இறந்தாரெனும் செய்தியின் நிதர்சன வலி இன்னமும் சிறிதளவேனும் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது .
எனக்கான இறைதேடல் சிற்பங்கள் அறையப்பெற்ற கோயில்களில் இல்லைதானென்றாலும் அதன் சப்த அதிர்வுகள் ,வாத்தியங்களின் ஒலியமைதி , மதில்களுக்கப்பாலேயே தீண்டாமை சாபம் பெற்ற நகரிய இரைச்சல் மாசுகளுக்கென்றே பொழுது போக்கின் தலமாக கோயில்களை நான் தேர்ந்ததில் ஆச்சர்யமொன்றுமில்லை . பார்க்கலாமங்கே ஆசிரியரை ஒற்றைப் பச்சைத்துண்டு என்றோ சால்வைஎன்றோ தெரிய மார்புவரை கட்டிய அவ்வொற்றை ஆடையில் நீறு பட்டையில் தேவாரம் , அருட்பா,அந்தாதியுடன் .
இதென்ன காதேலென்று தெரிவதில்லை முழுமூச்சாய் பாடலை மனனம் செய்து சிலைமுன் மன்னிக்க கடவுள் முன் கொட்டித்தீர்த்தல் .இதுவென்ன? என்னிடமும் புத்தகத்தோடு சரிபார்க்க சொல்லி ஒப்புவித்தாலும் கிடைக்கப்பெறும் அதிசயம் !. அவரோடான நட்பியம் எழுத்தென்ற
புள்ளியில் தான் நிகழப்பட்டிருக்கவேண்டும் .அரைகுறையாய் வாசிக்க தொடங்கிய காலங்களில் ( இப்ப மட்டும் ??? ) எழுத்தின் கிளர்ச்சியில் புணரும் வேட்கையொத்த எங்கேனும் பகிர்ந்து தீர்க்க வாய்க்கும் மனம் அவரானது .இந்த நேர்கையில் வறுமைக்கு பண்டமாற்றாய் மதமளிக்கும் பறங்கிய மதவியாபாரிகள் போல் என்னுள் அருட்பா திணிக்கும் சாமர்த்தியம் மெச்சத்தக்கது.பொதுவில் விடய அரட்டை தருணங்களில் எதிர்வாதம் செய்ய எவ்வொருவரையும் அவ்வளவு எளிதில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை . இவ்விடயத்தில் நான் நேசிக்கும் முட்டாள் தனம் மிகும் மனிதர் நிற்க.
தனிமைக் கொடும்முயக்கம் பெற்று உப்புத் தென்றலில் மரத்த உடலோடு கடலோடியாய் சிதைமாறிய பின் வீடு திரும்பும் நாட்களிலும் தனிமையோடான விபச்சாரத்திற்கென்றே அலையத்தொடங்கி வறண்ட நன்செய் நிலங்களில் பித்தொடு திறியும்தருணங்களிலெல்லாம் அவரைக்காண நேரும் தரை மேயும் மாட்டின் தும்போடு அதே பாசுரங்கள் ,மனனம் இத்தியாதி இத்யாதிகள்.
எம் .ஏ தமிழ் படித்து தலைமையாசிரியராய் ஓய்வு பெற்ற பகட்டு வேடம் பூணா அக்குழந்தைமை குணாதிசயத்திற்கென்றே மனைவி அமைந்தது :((
அம்மாவும் (அம்மாக்களின்) பழைய வருத்த சுய புராணங்களின் ஊடே சொல்லியிருக்கிறாள் ருத்ராபதி ஆசிரியரின் இளமைகால துன்பியல் நிகழ்வுகளை.
குரூரமும் ,கயமையும்,வேசித்தனமும் மிகும் எதையோ விழாமல் பற்றிகொள்ளும் பிரயத்தனமாய் இறுக்கமான யதார்த்தவாதிகளின் கேலிப்புன்னகை அதியதார்த்த அப்பித்து நிலை மனிதன் மீது வீசப்படும் நிகழ்வுகளில் நினைத்து கொள்கிறேன் எனக்கான இப்போன்ற கேலிச்சிரிப்பு உங்கள் உதடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று அந்நாளுக்கான கொண்டாட்டங்களை சேமித்தபடி.
அவரின் இடுகாட்டு பயணத்திற்கான ஒரு தோள் எனக்கானது சுடுகாட்டு சாம்பல் பொட்டலில் இறக்குகையில் தோளோடு சேர்த்து வலித்தது. ச்சே!இந்த பாழாய் போன கண்ணீர் சொட்டேனும் வரமறுக்கிறது...
இனி யாளியின் நாவை வெண்கலத்தில் கொண்ட ஆலயமணியதிர்வு நினைவுறுத்தும் அப்பரையும் ,பட்டரையும்
வள்ளலாரையும் அவ்வாசிரியக்குரலோடு !!!!!

15 comments:

ரௌத்ரன் said...

பாலா...இப்டிலாம் எழுதுவீங்ளா...ரொம்ப நல்லாயிருக்கு :)

மொழிநடை பத்தி சாட்ல வெக்கறேன் விமர்சனம்..தொடர்ந்து இது போல எழுதுங்க...

ராகவன் said...

அன்பு பாலா,

இது என்ன பாலா...ரேகை தப்பி பயணிக்கும் விதியாய் நெளிகிறது எழுத்து. வியப்பு, மேதைமை, குருபீடம், வேதனை, வலி,சொல்வண்மை என்று சுழலும் வாள் வீச்சு வார்த்தைகள். பின்னூட்டம் என்று ஏதும் எழுதாமல், பேசாமல் சும்மா இரும்பிள்ளாய்னு உள்ளுக்குள்ளே சொல்லிக் கொள்கிறேன்.
கொஞ்சம் கண்ணீர் விட்டு குழைத்து உடலெங்கும் பூசிக் கொள்ள துழாவி துழாவி கையில் அகப்பட்ட மண் மணக்கிறது பாலா... வேயுறு தோளி பங்கன். பாதாளம் ஏறினும் கீழே தெரிவது, தெரியாதது அடி அறியா பயணங்கள் சுவடுகளை அல்ல சூட்சுமங்களை சொல்லிக் கொடுக்கிறது.
வேண்டாம் பாலா... வேறு எழுதுவது உசிதம் இல்லை... முடித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவன்

குமரேசன் said...

அவருடைய எழுத்துக்கள், வார்த்தைகள், வாழ்கை முறைகள் எல்லாம் அவரின் குடும்பத்திற்கு முரண்பாடே .... அவரின் மூலம் பண்பட்டவர் பலர்..
"அவரின் உருவச்சிலைக்கு ஒப்பானது உனது எழுத்துக்கள் "
உன் வரிகள் உணர்ந்தவர்கள் அவரை நேரில் பழகிய அளவிற்கு பதில் எழுதும்போது எனது வரிகள் உன்னை சமன் படுத்தாது இதை என்னவர்களிடம் பகிர்வதே இதற்க்கு ஒப்பானது...

நன்றியுடன் அன்புசோதரன்...

அபுஅஃப்ஸர் said...

ஒஹ் இதுதான் காரணமா

எழுதுங்க பாலா

padma said...
This comment has been removed by the author.
padma said...

பாலா அப்படி ஒரு ஆசிரியரிடம் நானும் தமிழ் படித்து இருக்க வேண்டும் .பக்கத்தில் இருக்கும் திருவாரூரில் இப்படி ஒரு தமிழ் கோவிலா?தெரியாமல் போய் விட்டது. உங்கள் தமிழ் படித்து படித்து சொல்லொண்ண ஆனந்தம் .அனால் அந்த தமிழ் ஒரு இரங்கற்பா என்பதில் வருத்தம் .உங்கள் ஆசிரியர் இதை படிக்க நேர்ந்திருந்தால் ,நீங்கள் மீண்டும் இது போல் எழுதுவீர்கள் என்று மற்றொரு முறை உயிரை விட்டுருப்பார் .
கொடுத்து வைத்தவர் அவரா நீங்களா என்பது இங்கே ஒரு பெரிய கேள்வி .
உங்கள் தமிழில் மூழ்கி திளைக்கிறோம் .நிறைய எழுதுங்கள் .உங்கள் பின்னூட்டம் படித்தே உங்கள் ரசிகையாய் ஆனவள் நான் .
தமிழ் படிக்க முடியாத வருத்தம் இது போல் நல்ல தமிழ் படிக்கும் போது தீரும்

பா.ராஜாராம் said...

மாப்சு,

இப்படி கிளம்பிட்டீகளா இப்போ? :-)

ரெண்டு மூணு தடவை வாசித்தேன் மாப்ஸ்.

கடவாய் சக்கரங்கள் அசைய அசைய தானே உமிழ்.செரிமானம்.சக்தியும்.

சரியான திசை மாப்ஸ்!

ராஜ நடராஜன் said...

நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள் பாலா.

பாலா said...

@ ரௌத்ரன்
நன்றி நண்பா
@ராகவன்
வாங்க நண்பரே
@குமரேசன்
நன்றி சகோ
@வசந்த்
நன்றி மாப்பி
@அபு
நன்றி அண்ணாத்த
@பத்மா
நன்றிங்க சகோ வருகைக்குமாய் சேர்த்து
@பா.ரா
வாங்க மாம்ஸ்
@ராஜநடராஜன்
வாங்க நண்பரே

அஹமது இர்ஷாத் said...

நல்ல எழுத்து

நல்ல வாழ்த்து.....

ஜெகநாதன் said...

ஆசிரியர் மறைவுக்கு ஆறுதல்கள் நண்பா!

கூட்டிச் சுருங்க வைத்த மன ஓலங்களாய் வரிகள் படிக்க இதமாயிருக்கின்றன. சில வாக்கியக் ​கோர்வைகள் மட்டும் அயர்ச்சி அளிக்கின்றன.

//பறங்கிய மதவியாபாரிகள் //
புரியவில்லை :))

/ பித்தொடு திறியும்தருணங்களிலெல்லாம் //
திரியும்??

Sivaji Sankar said...

வணக்கமுண்ணே....... நலமா..?
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/button.html

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com