கடலின் காதலன்

Saturday, October 30, 2010

இசை - வன்முறையின் பேருரு

நுனி கிள்ளிய சிமென்ட் வர்ண கந்தக நாவு கொண்ட மருந்தின் நெடி வீசும் நாட்டு வெடிக்கு தீத்துளியினை தின்னக்கொடுக்க தயாரான மனநிலை அல்லால் கொலையான உடல் போர்த்திய வெள்ளை துணி விலக்கி முகம் பார்க்க முனையும் நடுங்கிய கரங்கள் கொண்டே மைக்ரோ ப்ராசசர் மூளையாகிப்போன உடலுக்கு பிடித்ததான மெலடி இசைச்சலனங்களை பதிவேற்ற முயலுதல் கர்ண கொடூரமான ஒன்றாகிவிடுகிறது இந்த பொழுதுகளில் ..

முடுக்கிவிடப்பட்ட விசைக்கென எந்திரமாய் இயங்குதலில் இடைத்தொந்தரவு நுழைதலாய் வந்து சேரும் என் ப்ரிய இசை வன்முறையின் பேருரு . சீனக்கற்கண்டாய் உடைந்து கொட்டிய கண்ணாடித்துண்டகளுக்குள் இதயம் புரட்டி எடுக்கப்படும் அதி உன்னத காரியம் புரியும் மெல்லிசையின் கொடும் கரங்கள் . நீரில் ஆக்சிஜன் பிரிக்கும் கருஞ்சிவப்பு நிற செவுள் மூடிப்பிரிய தரை துடிக்கும் மீனென இடம் மாறி இடம் விழும்கிழிந்த சருமங்களில் ரத்தம் ஒழுகும் இதயத்தின் குரல்வளையை இரக்கமின்றி துடிக்க துடிக்க அறுக்கும் பெண் கரம் மெல்லிசை ..

இசையை உயிர்ப்பித்த பின் உருபெறும் பிரளய சூழ்நிலை. தீக்கங்குகளால் நிரம்பி வழியும் அறையின் மூலையில் உறைவேன் நான் முழங்கால் கட்டிய கைகள், கண்ணில் விரியும் நெருப்பு பிழம்புகளாலான அறை,உடல் நடுங்க அமர்ந்த வாறே . என்னைத்தின்னத் தொடங்கிய தீயின் பசிதீர்கையில் எஞ்சிய மீதத்தை சேகரம் செய்து கொள்கிறேன் பின் நாளைய இறத்தலுகாக....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடர் வனத்துள் சுரணையற்று திரியும்
எந்திர மிருகம் நான் ப்ரியமே
நிர்வாணமாய் ஓடச்செய்து நீ
சவுக்கால் அடித்ததில் மாறியவன்
இவன்
நாளையொருநாளில் உன் விஷம் கொஞ்சும் கண்களால்,
சயனைடு இதழ்களால் மறந்தேனும் தீண்டிவிடாதே .
என் பற்களாலேயே கிழித்துக் கொண்டு இறப்பதை
தவிர வேறு வழி இல்லை எனக்கு .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அன்பின் அண்ணன் ராகவனுக்கு ...

6 comments:

sakthi said...

அருமை பாலா

ராகவன் said...

அன்பு நண்பன், சகோதரன்,ஆயன் இன்ன பிற பாலாவுக்கு,

அருமையான செரிவான எழுத்தும் நடையும்... நன்கு சரளைக்கொட்டிய ரோட்டில் அல்லது கற்கள் கிடக்கும் நதிப்படுகைகளில் குதித்து குதித்து பயணிக்கும் சுகமான ஜீப் சவாரி மாதிரி... இயல்பாய் கடக்க முடிகிறது... நீ எங்கு கூட்டிச் சென்றாலும்... இசை வன்முறையின் பேருரு... அற்புதமான சிந்தனை... ஜேகே, வெற்றி என்பது காட்டுமிராண்டித்தனம் என்றார்... அதே சாயலில் இது கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறது. இறகின் மீது பயணம் எனக்கு இசையறிதல்... மாயக்கம்பளம் சிலசமயம் எப்போதும் வன்முறையின் பேருருவாய் இருந்ததில்லை... இலையுதிர் மரணங்களின் போது கூட வாசிக்கப்ப்டும் தப்பாட்டம் அல்லது வாடிப்பட்டி கொட்டுக்கு நான் வன்முறை என்று பேரிட்டது கிடையாது. இசையை வன்முறையாய் பார்ப்பது ரொம்பவுமே வித்யாசமான சிந்தனை... கொடும் கரம் கொண்டு இரக்கமின்றி இதயத்தின் குரல்வளை அறுக்கும் ?! பெண்கரம் மெல்லிசை... அபாரம்டா... இசை ஏற்படுத்தும் ஞாபகங்கள், பிரிவு, துயரம், இழந்த போன ஏதோ ஒன்று, இசை ஏற்படுத்தும் வெற்றிடம் எதனால் துயருறுகிறது நீ??? எஞ்சிய மீதத்தை சேகரம் செய்து கொள்கிறேன் மீண்டும் நாளைய இறத்தலுக்காய்...

“கிழிந்த சருமங்களில் ரத்தம் ஒழுக நீரில் ஆக்சிஜன் பிரிக்கும் கருஞ்சிவப்பு நிற செவுள் மூடிப்பிரிய தரை துடிக்கும் மீனென” என்னமோ உதைக்குது தர்க்கரீதியான குறை ஏதோ இருக்கு... வகைப்படுத்தமுடியலை...

யார் அந்த ராகவன் அண்ணன்? நானாயிருக்கும் பட்சத்தில் நன்றிகள் பல... ஆனா எதுக்குன்னு தான் எனக்குப் புரியலை... தலைய சொரிய சொரிய மண்ணுதான் வருதுடா...

வழக்கம் போல அருமையான நடை...அடிக்கடி சொல்கிறேன்... இடையே இடையே தேவையில்லாமல் சேர்த்த வார்த்தைகள், திரும்ப திரும்ப வரும் ஒரே மாதிரியான பிரயோகங்கள்...சில சமயம் அயர்வாய் இருக்கு... நீ கல்குதிரை அல்லது நேசமித்ரன் அதிகம் படிக்கிறாய் என்று நினைக்கிறேன்... கோடு போட்டுக் கொள் அது ஒப்பனையாய் மட்டும் இருக்கட்டும்... சூடு போட்டுக் கொள்ளாதே காயங்களாய் போய் விடும்.

அன்புடன்
அண்ணன்டா!

sakthi said...

சூடு போட்டுக் கொள்ளாதே காயங்களாய் போய் விடும்.
::)))))

நேசமித்ரன் said...

நீ கல்குதிரை அல்லது நேசமித்ரன் அதிகம் படிக்கிறாய் என்று நினைக்கிறேன்... //

ராகவன் என்னை படிக்க வேண்டாம்னு சொல்றீங்களா ?

விஜய் said...

GOOD CLEF

இன்றைய கவிதை said...

அருமையான நடை பாலா

“என்னைத்தின்னத் தொடங்கிய தீயின் பசிதீர்கையில் எஞ்சிய மீதத்தை சேகரம் செய்து கொள்கிறேன் பின் நாளைய இறத்தலுகாக.”

நிதம் நிகழ்தல் இது, ரசித்தேன் பாலா

நன்றி
ஜேகே