கடலின் காதலன்

Friday, July 16, 2010

பரத்தி உலவும் கடல்

கண்ணம்மாக்களுக்கு கண்ணன்களும் ,யட்சிகளுக்கு யட்சன்களும் தோன்றிய படியே இருக்கிறார்கள் இப்புவிப்பந்தில் ( அல்லது ) கண்ணன்களாகவும் யட்சன்களாகவும் மாறியபடி இருக்கிறார்கள் . தேவதைகள் (கண்ணம்மா,யட்சி என்று கொள்க ) வானிலிருந்து கொடிபிடித்து இறங்கி வருவதில்லை .யுகாந்திரங்களாய் அதே இளமை பச்சையத்தொடு இங்கேயே இயங்கியபடி இருக்கிறார்கள். தேவதையின் வர்ணம் சொட்டும் இறகுகளால் ஆசிர்வதிக்கப்படுதல் அற்புதமானது அது கண்ணம்மாவை முதல் தரிசனமுரும் உன்னத கணமாகவும் இருக்கலாம் .!!
-----------௦- 0 ------------
கடல் .
மூன்றெழுத்து சோடியம் குளோரைடு பிரம்மாண்டம் .
தலை கால் முளைத்திராத (அ ) புரியாத விலங்கின நீர்மம் .
பவளப்பாறையையும் ,எரிமலையையும் ஒரேவயிற்றில் சுமக்கும் மகாகர்ப்பம்


சிலுவைகள் உலவும் கிருத்துவ கடற்கரையில் முதல் தரிசனத்தை எனக்கு தந்து விட்டிருந்தது கடல்.
ஞாபக சிக்கலின் பின்னலிலிருந்து உருவி எடுக்கிறேன் முதல் பார்த்தலை .மழித்த தலையோடே முதல் கூடலைத்தொடங்கினேன் ஒரு மதியத்தில் . அந்த தீண்டலின் தீட்டே இன்றுவரை எனை பீடித்து நிற்கிறது.
தன் ஜீன்களை புதைத்தனுப்பும் தாத்தன்களின் வேலை செய்யும் எந்தவொரு பிரபஞ்ச இயற்கைக்கும் இருந்திரா சக்தி ஆழிக்கு.
ஒருகல் உப்பில் உறைந்திருக்கிறது கடல்.
செம்படக்கிழவியின் கூடை மீன்களின் ரப்பர் விழிகளில் விரிகிறது மகா சமுத்திரம் .
உடல் தனியே ;இயங்கிக் கொண்டிருக்கிறது நுரையீரல் . சங்கு. இன்னமும் ஊதிக்கொண்டிருகிறது கடல் மூச்சை. இதெல்லாம் சரி எனக்குள் ஏன் வந்து உறைந்தது கடல் ???.
***************************************************************
பிறகு ஒரு நாளில் கண்ணம்மாவுடனான நட்பு நட்பின் எல்லையை கடந்திருக்கலாம் . கண்ணம்மாவின் சிருஷ்டி தன்மை விசித்திரமானது . உங்களுக்காக அவளா அல்லது அவளுக்காக நீங்களா என்ற குழப்பத்தில் ஒருநாள் நீங்கள் தொலைந்து விடக்கூடும் அவளினுள். கேட்டு பெறவேண்டிய அவசியம் அவளிடம் உங்களுக்கு நேராது. என்றோவொரு ம"ரண" தினத்தில் அவளை நீங்கள் கொலை செய்துவிடக்கூடும்!!!. பின் இரத்தக்கறைகளோடு முகத்தறைந்து கொண்டழும் உங்கள் கண்ணீர் துடைத்து தேற்றிக் கொண்டிருப்பாள் கண்ணம்மா !!!!!!
*********************************************************************************************************
கடல் புழங்கத் தொடங்கி இத்தோடு ஏழு வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது .தோலோடு சேர்த்து இதயமும் பழுப்பு உப்போடு உரமேறியாகிவிட்டது. கடலாடும் பரதவர்க்கு இணைநான் இல்லையென்றாலும் கடல்சார் மாற்றங்கள் எப்படி இல்லாமல் போய்விடும் . அரக்கூர்கள் மேல் நடக்க பயிற்றுவித்து மலரா முகையிடம் காயப்பட பழக்கிவிட்டது நன்றாகவே . முப்பத்து மூன்று சதவிகித (அதுவல்ல) குணக்கலப்பீட்டில் நான் என்பது பைத்தியக்கார மிருகக்குழந்தை .
சகல வசதிகளோடு மிதக்கும் " பாஸ்கல் நிலைமம்" . மூடவும் திறக்கவும் கதவுகளுக்கு புறவிசைத்தேவைப்படா "பிட்சிங்களும் ரோலிங்களுமாய்" சீறிக்கொண்டிருக்கிறது சர்ப்பக்கடல். கப்பல் மேல்தளத்தை வந்து நக்கிவிட்டு போகிறததன் நாக்கு .புணர்தலாடும் கிறக்கத்தில் எவ்விக்குதிக்கிறது நாற்புறமும். மூச்சின் சீற்றம் .பேரிரைச்சலின் இந்த மரண மௌனத்தை நீங்கள் பருகியதுண்டா ?? என் தியான பீடம் இது !!! . ஓங்கார மௌனத்தின் சப்தத்தில் செத்துக்கொண்டிருப்பேன் நான் பின் புறக்கப்பலில் ...
மண் பார்த்தல் ? அழகு .மலை பார்த்தல் ? ம் அழகு . மழையோடு மலை பார்த்தல் ? ம்ம் அழகோ அழகு என்றே கொள்ள .கடல் பார்த்தல் பேரழகு , இறையழகு . கடலிலிருந்து கரைசேர்வதற்கு முன்பான கரை பார்த்ததுண்டா ? நெடு நீண்ட பிரிதலுக்கு பின் காதலி/மனைவியின் கண் பார்த்தவர்களுக்கு முந்தைய கேள்வி தேவை இராது .
அதே கடல் அதே இடம் நேற்று விட்டுப்போன அந்தப்பழைய கடலை காணவில்லை !! தினத்திற்கு தினம் புதியவளா நீ ? இந்த மார்கண்டேய மினுமினுப்பு எங்கிருந்து வருகிறது உனக்கு ? மாற்றி மாற்றி அலை சீவிக்கொள்ளும் சிகையலங்காரப்ரியையா நீ ??
இனி நீங்கள் சிரித்துக்கொள்ளலாம் (??)
சில நாட்களாய் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறேன் கடலோடு .கண்ணால் தின்று தீர்த்தபின்னும் பசி பசி என்றலறிக்கொண்டிருக்கிறது ஓநாய் வயிறோடு நான் .அழுகையையும் ரணங்களையும் பரிசாய் ஈந்தபடி பேசிக் கொண்டிருக்கிறேன் அவளோடு. அழும் ஆணை பெரும்பாலும் பெண்களுக்கு பிடிப்பதில்லை என்று எவளோ சொன்னதை நமுட்டு சிரிப்போடு நினைவு கூர்கிறேன் . அழும் என்னைத்தான் பிடித்துவிட்டிருக்கிறது இவளுக்கு ...

**********************************************************************
கண்ணம்மாக்கள் உடல் ஏறி வருவதில்லை இல்லை இல்லை கண்ணம்மாக்களுக்கு ஸ்தூல உடல் தேவைப்படுவதில்லை .தீராத ஒரு வாதையின் குறியீடு கண்ணம்மா .தீர்க்கவியலா உணர்ச்சிகளின் வடிகால் கண்ணம்மா , துயரங்களின் சுமைதாங்கி கண்ணம்மா . நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழமுடியா நிகழ்வுகள் கண்ணம்மாக்களால் நடப்பவை. கண்ணம்மாக்களும் நீங்களும் அல்லது நானும் இருப்பது தனிப்ரபஞ்சம் வண்ணத்துப்பூச்சிகள் தேனெடுக்கும் பருவத்து மலர்களால் நெய்யப்பட்ட பிரபஞ்சம் . கனவுலகின் எல்லை கண்ணம்மா .எல்லாமும் அவளே . கண்ணம்மா எனக்கு கடல் . கடல்! கண்ணனம்மா!! கடல். !!
இதோ அலைக்கொங்கைகள் புடைக்க மோகத்தில் விம்முகிறாள் என் கடற்காதலி கண்ணாம்மா !!
கண்ணம்மா !!!!!


15 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//.மழித்த தலையோடே முதல் கூடலைத்தொடங்கினேன் ஒரு மதியத்தில் . அந்த தீண்டலின் தீட்டே இன்றுவரை எனை பீடித்து நிற்கிறது.//

இதுக்கப்பறம் போகவே ரொம்ப நேரமாச்சு பாலா எழுத்தும் சொல்லிக்கொடுக்கிறது கடல் உனக்கு....

கமலேஷ் said...

எப்பா சாமி...ஒன்னும் பேச முடியலை..
மெயில்ல வாறேன் நண்பா...நிறைய சந்தேகம் உண்டு..

பத்மா said...

ஒருகல் உப்பில் உறைந்திருக்கிறது கடல்.

இந்த ஒரு வரியில் உறைந்திருக்கிறது உன் தமிழ்
என்னா ஒரு வீச்சு பாலா? ஒரு மூச்சில் அத்தனையும் பருக வெறி வருகிறது ..
அலையோசையில் வார்த்தைகள் உன்னை வந்து கட்டிபிடித்துக் கொள்கின்றன நீ கள்வெறி பிடித்து கதறுகிறாய் .இத்தமிழ் கேட்கவே நீ கரைஏக நாளாகட்டும் என வாழ்த்தினால் நான் சுயநலம் பிடித்தவளாவேன்.. எனினும் உன் த்யானம் தொடர என் பிராத்தனைகள்
கொன்னுட்ட பாலா

நேசமித்ரன் said...

ம்ம் நல்லா எழுதி இருக்க

:)

வினோ said...

நண்பரெ பல இடங்களை தாண்டி வர முடியாமல் தவிக்கிறேன்.... கூடியவிரைவில் பேசுவோம்

sakthi said...

bala wonderful

sakthi said...

கண்ணம்மாவின் சிருஷ்டி தன்மை விசித்திரமானது . உங்களுக்காக அவளா அல்லது அவளுக்காக நீங்களா என்ற குழப்பத்தில் ஒருநாள் நீங்கள் தொலைந்து விடக்கூடும் அவளினுள்.

nice

sakthi said...

தன் ஜீன்களை புதைத்தனுப்பும் தாத்தன்களின் வேலை செய்யும் எந்தவொரு பிரபஞ்ச இயற்கைக்கும் இருந்திரா சக்தி ஆழிக்கு

bala arumaiyana solladal

sakthi said...

புழங்கத் தொடங்கி இத்தோடு ஏழு வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது .தோலோடு சேர்த்து இதயமும் பழுப்பு உப்போடு உரமேறியாகிவிட்டது.

tamil font work agalai illaina intha line ku oru kavithaiye eluthierupen

sakthi said...

கடலிலிருந்து கரைசேர்வதற்கு முன்பான கரை பார்த்ததுண்டா ? நெடு நீண்ட பிரிதலுக்கு பின் காதலி/மனைவியின் கண் பார்த்தவர்களுக்கு முந்தைய கேள்வி தேவை இராது .

appadiya romba feel aa eruku pa

sakthi said...

எல்லாமும் அவளே . கண்ணம்மா எனக்கு கடல் . கடல்! கண்ணனம்மா!! கடல். !!இதோ அலைக்கொங்கைகள் புடைக்க மோகத்தில் விம்முகிறாள் என் கடற்காதலி கண்ணாம்மா !!கண்ணம்மா !!!!!


nalla lover pa

ராகவன் said...

டேய் பாலா,

கொல்றடா! என்ன அழகான எழுத்து... தமிழ் ஒரு பெருங்கடல் உனக்கு... உண்ணத்தருவதுடன், ஊட்டியும் விடுகிறது வழிய வழிய... அடங்காப்பசியுடன் அலையும் உனக்கு போதுமா சமுத்திரவெளி எனக்குத் தெரியலடா...

ஆர்ப்பரிக்கும், அரட்டி உருட்டும் கடல், துளித்துளியாய் வியர்வையில் திரள்கிறது பாலா... ஜேடி குருஸ் உன்ன பாடா படுத்துறாரு போல... ஆரத்தழுவிய கலவியில் மிதந்து மயங்கி கிடக்குது கடலே ஒரு படகாக கடத்துகிறது உன்னை, என்னை... எங்கே இருக்கிறது இந்த பவளப்பாறைகளும், முதலாய் ஜனித்த உயிரினங்களும் ப்ரமாண்டத்துள் மறைந்திருக்கும் ப்ரமாண்டங்கள் என ஒவ்வொரு துளியிலும் மூழ்கிவிடுகிறது மொத்தமும்.

கடலின் நீட்சியாய் கண்ணம்மா, கண்ணம்மாக்களின் நீட்சியாய் கடலும்...

அன்புடன்
ராகவன்

சத்ரியன் said...

//அலைக்கொங்கைகள் புடைக்க மோகத்தில் விம்முகிறாள் என் காதலி//

மாப்ள பாலா,

சுதியேத்துறியே சாமீ...!

☀நான் ஆதவன்☀ said...

அருமையா இருக்கு பாலா. நல்ல அடர்த்தியான கட்டுரை. வார்த்தைபிரோயகம் நிறைய இடத்துல கலக்குது :)

Guruji said...

அருமையா இருக்குகட்டுரை.