கடலின் காதலன்

Monday, August 9, 2010

மஞ்சள் குளவி உறையும் வீடு.


தெருக்கழிநீர் நெளியும் பொரிவடிவ
புழுவெனை எச்சில் செஞ்சாந்தில் வனை

எஸ்கிமோ குடிலினுள் கூம்பொத்த
பின்கொடுக்கில் விடம் வைத்து
கொட்டினாய் நீ என் மஞ்சள் குளவி !
விட போதையின் பேரின்பத்தில்
மஞ்சள் சிறகுகள் முளைத்து விட்டது
எனக்கும் !!.
@@@@@@@@@@@@@@
அன்று கழிவறை கதவிடுக்கில் பாதி உடல் நசுங்கிய வாகன விபத்தான மனிதனென செத்துக்கொண்டிருந்தது ஒரு பல்லி சந்தன வர்ண கண்ணாடி உடலில் ஒற்றை வெளிர் முட்டை தெரிய .பார்த்தேன் .பார்க்க மட்டும் செய்தேன். என் தனியறை கிழக்கு மேல் மூலையில் செம்மண் சாந்தில் நெய்யப்பட்ட குளவிக்கூட்டை உடைத்து போட்டேன் செத்து விழுந்தது வெள்ளைப்புழு.
"வேறெங்கெல்லாம் கூடு கட்டிருக்கு சங்கீதா" என்றழைத்தபடி வாசல் நிலை மரச்சட்டத்தில் இருந்ததை உடைக்க போனேன் . பதறி தடுத்தாள்.
ஜன்னலில் இரண்டு ,சாமிமாடம் அடுப்பங்கரையில் என ஒழுங்கற்ற அரைவட்ட மண் முட்டைகள் இட்டு அகதிக்குடியேற்றம் செய்திருந்தன குளவிகள்.
"எல்லார் வீட்டுலயும் இந்த கொளவி கூடு கட்டாது தெரியுமா? ரெண்டு தடவ அது கூடு கட்டுனத ஓடைச்சிட்டீன்னா இந்தப்பக்கமே வராது தெரிஞ்சுக்க . பாவம் ,துரோகம் "

"கொளவிக்கு வக்காலத்து வாங்குறியா நீ "

"சிலந்தி கூடு கட்டலைன்னு கட்டுன வீட்டையே வித்து போயிட்டாண்டா ஒருத்தன் " இடை நுழைந்தாள் வாசல் பெருக்கும் தயார் நிலையுடன் அம்மாவானவள் .
" ?!"
"சன்னாவூர் (சன்னாநல்லூர்) பக்கத்துல இடம் வாங்கி கட்டி குடியும் போன பெறகு வீட்டுல ஒரு பல்லி ,சிலந்தி இல்லைன்னு ஏதோ தோஷம்னு பயந்து கட்டுன வீட்டையே வித்துட்டு போய்ட்டாங்களாம் "
முட்டாள் தனத்தின் மொத்த குத்தகையான செயலுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கும் பேச்சு தொனி .
வாசல் பெருக்கும் சப்தம் . போய்விட்டிருந்தாள் .

அம்முட்டாள் தனம் மீதான சிரிப்பின் சப்தங்களை மூளை வாய்க்கனுப்பாமல் தின்று விட்டிருந்தது . மூடத்தனத்தின் செய்கைக்கு ஜால்ரா தட்டும் மனிதர்களின் மீதான கோபத்தின் வெப்பத்திலிருந்தும் கிளர்ந்து எழுந்து விட்டிருந்தது ஒற்றை இழை அந்த வீடு விற்றவன் மீதானது .
தனியுரிமை தனத்தின் வேர்கள் கிளைவிட்டிருக்கும் மாறிப்போன நான் இயங்கும் சுயநலமீன்கள் உலவும் சமுதாயத்தின் கிளைகளின் நுனியிலும் தன்னலத் தளத்திலிருந்தே மூடத்தனமான அம்முடிவு எடுக்கபட்டிருப்பினும் பயம் கலந்த அவ்வன்பிலும் கொஞ்சம் மனிதம் ஒட்டிக்கிடக்கிறதென்று மகிழ்ந்து கொண்டேன் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தேனூட்டும் மஞ்சள் சட்டைக்காரி

கூட்டிற்குள் அடைகாத்திருந்தாய்
உதிரம் முறித்து மெழுகு முலைகள்
புதைத்து தேனூட்டினாய்
வளர்சிதையும் மாற்றங்களை ரசித்தாய்
சிறகுகள் முளைக்குமென காத்திருந்தாய்
இறகுகள் குவிய குடைபிடிப்பேனென
ஏங்கியிருந்தாய்.
இறக்கைகள் முளைத்த தினவில் அடித்து
வீசிவிட்டேன் உன்னை ..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராணி சந்ததிகளின் அழிவுக்குப்பின் நேச விலங்கென்று எதுவும் வீட்டில் ஒட்டுதலாய் இல்லை . பெருமாள் நாயுடு ஞாபகார்த்த சின்னங்களாய் விட்டுப்போன அடிபம்பும் எண்ணெய் பிசுக்கேறிய கொல்லை வாசல் நிலைப்படியோடு ராணியின் வம்சாவளிக்காவல் நாய்களும் சேர்ந்திருந்தது . பழைய கெளப்புகடை வீட்டில் ராணி வம்சாவளிகள் இருந்த வரையில் கள்ள ,நல்ல பூனைகள் நடமாட்டம் இருந்ததில்லை அத்தோடு பால் புழங்கும் டீகடையோடான வீடும் பூனைகளை நல்லவைகளாய் இருக்கவிட்டதில்லை !. இப்போதான மாடி வீட்டு பரணை குத்தகைக்கு எடுத்திருக்கின்றன ஒரு ஜோடி புலிக்குடும்பப்பங்காளிகள் . குழம்பெனில் மீனும் ,இல்லையெனில் மோர்சாதம் மட்டுமே அவைகளின் பேவரைட் மெனு என்று அவைகளின் நாவுகளை படித்திருக்கிறாள் சங்கீதா . குழம்பு சாதம் சாப்பிடும் வரை காத்திருந்து தயிர் எடுக்க பிரிட்ஜை திறக்கும் தருணம் உணந்து ஹேர்பின்னென வாலை ஒடுக்கி கால் களை சுற்றியபடி "மியாவ்"களை ஒலிபரப்ப தொடங்குவதாய் ஆச்சர்ய செய்தி அறிவிக்கிறாள் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பூக்கள் பேசுவன.!. அடிகுவிந்து வாய்விரிய குழாய் ஸ்பீக்கர்கள் வடிவில் அவை இருப்பதற்கான காரணங்கள் அதுதான் போலும் . வெட்டாற்றின் கரையோர சீமை காட்டாமணக்கின் ஸ்பீக்கர் பூக்களின் பேச்சுகளை மறுஒலிபரப்பு செய்து கொள்ளுதல் அதிஉன்னதமானது .தொட்டு பார்த்தலிலேயே கண்ணிவிடக்கூடிய என்வரையிலான அனிச்சம் அவை. அதிலிருந்தோ என்னவோ குழாய்வடிவ இதழ்களற்ற மலர்கள் மீதான காதல் புதுவீட்டின் பூஜையறை ஜன்னலோரத்தில் சொர்ணபுஷ்ப கன்று நாடும் வரை விட்டிருக்கிறது .சொர்ணபுஷ்பத்தின் மஞ்சள் குழாய் பூக்கள் வாசமற்றவை அதற்கான பரிகாரமாய் வர்ணம் பீச்சுபவை .
பூக்க தொடங்கிவிட்டால் கூட்டிமாளாது.தன்னிடத்தை மலர்க்குப்பைகளால் அலங்கரிக்கும் காதலியின் சில்மிஷ
தொந்தரவுகள் அவை . அலைபேசி கோபுரங்களின் மின்னணு சமிக்ஞை களுக்கு தப்பிய ஏதோவொரு தேன்சிட்டு இலைகளை தொன்னையாக்கி சொர்ணபுஷ்ப செடியில் குடி புகுந்திருப்பதாய் சங்கீதா தொலைபேசுகையில் சொன்னாள். பிறகான நாட்களில் என் தொலைபேசும் குசலவிசாரிப்பு தருணங்களில் ஒரு கணத்தை பிடித்துக்கொண்டுவிட்டது தேன்சிட்டும் அதன் கூடும் .
வீடு திரும்பலின் பின் .அடிக்கடி பார்த்தல் , பிரவுன் புள்ளிகள் மேவிய முட்டைகளை எண்ணுதல் , ரசித்து குதுகாலித்தல் தனமான என் சிறுபிள்ளை தொந்தரவுகள் அக்குருவியை பெரிதாய் இம்சித்து விட்டது போலும் .பிறகொரு நாளில் பிய்ந்து தொங்கிய நார் கூட்டில் முட்டைகளை காணவில்லை .ஒருவேளை ஓணானோ வேறெதுவோ அதை தின்றிருக்க வேண்டும் அல்லது குருவி இடம் பெயர்ந்திருக்கவேண்டும் . மொத்தத்தில் குருவி இனி இல்லை .
"இப்போ திருப்தியா?" சங்கீதா
":( :( " நான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வெறுமை நிரம்பும் கூடு

உயிர்கள் சூழ இருத்தல் கிடைக்கப்பெறுவது ஆசிர்வதிக்கப்பட்டது .செய்நேர்த்தி புரியும் ஸ்பைடரின் எச்சில் சித்து விளையாட்டுகள் பட்டுபூச்சிகளும் அறியாதவை .பட்டு பூச்சியினும் சிலந்திகளை ரசிக்க தொடங்கிவிட்டேன் சில நாட்களாய் . பிறகொரு மதியத்தில் மஞ்சள் குளவி பற்றியான எங்கள் பேச்சு திரும்பியதில் அது கூடு காட்டும் செயல் முறையை டெமோ எடுத்தாள் சங்கீதா . முன் கைகளை அசைத்து மண்ணோடு எச்சில் பிசைந்து பூசுவதாய் அவள் வாய்முன்னே கை அசைத்து செய்து காட்டலில் நகைத்து கோபம் சம்பாதித்து கொண்டேன் .
சிறகு வளர்ந்து பறக்கும் வல்லமை பெற்றுவிட்ட நாளில் தானே துளையிட்டு வெளி வந்து பறந்துவிடுவதாய் துளையுள்ள கூடுகள் அனைத்தும் குளவிகளற்று இருப்பதை உடைத்து காட்டினாள்.கர்ப்பம் சுமந்த கூடுகளின் வெறுமை காண சகியாததாய் இருந்தது .
வரும் செப்டம்பர் மூன்றில் சங்கீதாவிற்கு திருமணம் ,அன்றிலிருந்து இதே வெறுமையை சுமக்க தொடங்கிவிடும் என் வீடும் ...............

9 comments:

வினோ said...

/ தனியுரிமை தனத்தின் வேர்கள் கிளைவிட்டிருக்கும் மாறிப்போன நான் இயங்கும் சுயநலமீன்கள் உலவும் சமுதாயத்தின் கிளைகளின் நுனியிலும் தன்னலத் தளத்திலிருந்தே மூடத்தனமான அம்முடிவு எடுக்கபட்டிருப்பினும் பயம் கலந்த அவ்வன்பிலும் கொஞ்சம் மனிதம் ஒட்டிக்கிடக்கிறதென்று மகிழ்ந்து கொண்டேன் . /

:))

சங்கீதாவிற்கு வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

நல்ல அண்ணன்

sakthi said...

அருமை பாலா

sakthi said...

எல்லார் வீட்டுலயும் இந்த கொளவி கூடு கட்டாது தெரியுமா? ரெண்டு தடவ அது கூடு கட்டுனத ஓடைச்சிட்டீன்னா இந்தப்பக்கமே வராது தெரிஞ்சுக்க .

என்ன ஒரு நல்ல மனசு

sakthi said...

பயம் கலந்த அவ்வன்பிலும் கொஞ்சம் மனிதம் ஒட்டிக்கிடக்கிறதென்று மகிழ்ந்து கொண்டேன்

நல்லது பாலா

sakthi said...

வரும் செப்டம்பர் மூன்றில் சங்கீதாவிற்கு திருமணம் ,அன்றிலிருந்து இதே வெறுமையை சுமக்க தொடங்கிவிடும் என் வீடும் ............


எல்லாருடைய இல்லத்திலும் பெண்கள் வீட்டில் இருக்கும்வரை காலாகாலத்தில் கல்யாணம் ஆகவில்லை என்பதும் திருமணம் உறுதிசெய்யப்பட்டுவிட்டால் வெறுமையை நினைத்து தவிப்பதும் தான் வழமையோ பாலா

நேசமித்ரன் said...

நல்லா எழுதியிருக்க மாப்ள !

குமரேசன் said...

மஞ்சள் குழவி உறையும் வீடு ...
உடைந்த கூடெல்லாம் சங்கீதா பேர் சொல்லும், வீடு நுழையும் போது எதோ ஒரு வெற்றிடம் தோணும் நிகர எடையில் வேறொருத்திக்கு அந்த இடம் உண்டு வரவேற்பிலும் குறையிருக்காது.. என்ன ? ? ? ?

பத்மா said...

படித்து முடித்ததும் அழுகை வருது பாலா ...
பிரிவு எத்தனை கொடுமை ...

தொண்டைக் குழி அடைத்து விம்மி பல நாட்கள் ஆகின்றன

பிரியமான அண்ணனே ...பெண்கள் எல்லாம் நாற்று தானே ..

வேறொரு நாற்று அந்த வெறுமை மாற்ற விரைவில் வரும்