கடலின் காதலன்

Tuesday, May 24, 2011

பரத்தி குறிப்புகள்

பிரக்ஞையற்று கடல் வெறிக்கும் பார்வைக்குள் கடலாடுவாள் என் பரத்தி

கண்ணம்மாவிற்கு திறப்பு மடல்.
அரிசிப் பற்களும் , சுருள் கேசமும் ,ஒளியுமிழும் கண்களுமாய் பூசணி விதையுருவில் அரசின் பழுப்பிலை படபடக்கும் அதிர்வில் துலங்கும் அகல் நாவின் நாமம் நீ .
இட்டு நீர் வார்த்து கொடுக்கும் கரத்தின் நடுக்கமாக எழுதி சேர்ப்பிக்கிறேன் பரத்தியை உன்னுக்கும் மழலைக்கு கனிந்த உன் தனங்களென மனம் தாழ் குரோதம் தவிர் .
பிரக்ஞையை ஊடறுத்து அந்தகார இருண்மையின் பூரணத்தில் ஒளிப்பிழம்பாய் என் மேல் பொழியும் நீ வந்து சேராக் காலப்போழுதுகள் அவை.
தரை நக்கி மன்னுண்ணும் இளங்கன்றின் பிராயத்துக்கடல் .அலை தின்னும் மணற்கரை .. பால் முதிரா சிறுவன் நான் ப்ரபா. வரிகளோடிய கிளிஞ்சல்கள் சேகரித்தேன் பலூன் மரங்கள் கிளைவிட்டு திரியும் அலைகரையில் .
ரோமங்களடர் யோனி துவங்கி தேகம் யாவனக்கண் நிறத்தாலானவள் களிறின் சுவாசக்கையென நீண்டுயர்ந்து என்னை வாரிசுருட்டி மடிகிடத்தி மார்புதைத்து ஊட்டிவிட்டு போனாள் காதெலெனும் பேரன்பை .
மூர்ச்சை தெளிய என் தலை கிடந்த மடிக்காரியின் கண்ணீர்த்துளி கரித்த என் உதடுகளில்
பரத்தி தனத்திரவத்தின் ருசி. "உப்பின் மறு பெயர் பேரன்பு "
..
ப்ரபா !அகவும் ஆண்பறவைஎன மழைக்குள் இறகு பூப்பவள் நீ. உன் பீலியின் துத்தநாகநிறக்கண் எவ்வொன்றிலும் கடல்தேடுபவன் மழையாடுபவள் உனக்கு தருகிறேன் என் பரத்தியின் சில குறிப்புகள்.

*
நீர் சர்ப்பம் தீண்டியுன் நிறம் பாரித்த உடல்கொண்டு
நிகழ்த்துகிறேன் கைக்கிளையின் யாகம்
பசலை ரேகையோடும் முகக்குழியுள்
கிறங்கும் கண்களில் நிதம்பக்கனா
அடியே ! கடற் பரத்தி என்னை புணர்
*
டால்பின் கடற்சிங்கம் வண்ணத்து பூச்சிகளாய்
அடியாழக்கடலில் கால்பெருவிரல் உந்தி எட்டிப்பிடித்து
இடம் மாற்றிப்போட்டு விளையாடுகிறாள் நுளைச்சிமகள்
மயிர்களடர் மார்புக்காரன் உள்ளுயிர் கசிய
சுட்டு விரல் நீட்டுகிறேன் நுந்தை கரம் பற்று .
*
காலப்பொதியின் பாரம் அழுத்துகிறது தலைக்குள்ளும்
உள்ளெங்கும் செந்தழும்புகள், ஆறாப்புண்களின் நிணக்கவுச்சி
பிணவாடை . என் உலகெங்கும் சுயநலக்கொடுவாள் வீசி
வேசை சிரிப்பு உதிர்க்கும் மனித முகங்கள்
சமுத்ரா காவுகொள் என்னை .

கேள் பிரபஞ்சனா!! முகவரியற்று இலக்கின்றி எங்கிருந்தேனும் எறி கற்கள் பரிசாய் கிடைக்கும் சாத்தியம் பெற்றலையும் தெருநாய் என்னை சமைத்து விட்டு போனாய் உப்புபூக்கும் மரக்கன்றாக . இந்நாட்களின் இரவுகளில் என் அறைநிரம்புகிறது உப்பு மலர்களால் கண்கள் சொரியும் புஷ்பங்களில் பேரன்பின் வாசனை ,நிராகரிப்பின் நெடி உன்னை பழிப்பேன் .

பரத்தி நினைவாய் ..

* கொடும்நீர்ப்பாலையினொரு பகல் பொழுதில் கொலை பாதக குற்ற உணர்ச்சியோடு அவள் மேல் இயங்குகையில் அலைகளோடுமவள் அடி வயிற்றில் பார்த்தேன் நீல நிற ஓங்கல் குட்டியொன்று சினேக பாவமாய் சுற்றிக்கொண்டிருந்தது .

*
இரத்த வீச்சத்திற்கு அலையும் வன்சுறாக்களுக்கு அரிந்து வீசினேன் அவள் விடாயுதிரம் கொண்டெழுதிய காதலின் சின்னங்கள் புறாக்கள் வடிவுற்று படரும் பசலை தின்ற உடல்சுவர் பிரதேசங்களை -மகாஊடல் .
நானும் இரையான போது அவள் அழுகுரல் தூரத்தில் ஒலித்தது.

*
நீர்மேலாடிய கால்கள் தரைபாவிய நாளில் ஒருநாள் சங்கேத இடிமுழக்கங்களுடன் புயலோடு வந்தவள் வீடு முற்றத்தில் என்னை வன்கலவி தன் விலாகிழித்து பிரசவித்து விட்டு போனாள்.
மழைநீர் குருதி கரைக்க முற்றத்தில் துள்ளுகிறது தொப்பூழ் கொடியருந்த டால்பின் குட்டியொன்று.
தொடரும் முடிவாய்
வன்மம் தணிய உன் கொழுத்த உடல் மீது காறி உமிழ்ந்து , சிறுநீர் கழித்த படி தெற்கு நோக்கி கூவுவேன் வேசி மகளே உன்னை காதலிக்கிறேனென்று .

- - ப்ரபாவிற்கு


7 comments:

பத்மா said...

bala ...welcome back..
maalai comments ...mikka makizchiyaai irukku !

நட்புடன் ஜமால் said...

தமிழ் எழுத்துகள் போலத்தான் தெரியுது :P

ராகவன் said...

அன்பு பாலா,

பரத்தையின் நேசம் சிலிர்ப்பு... என்ன மொழி பாலா... பிச்சுட்டே...

உப்பின் மறுபெயர் பேரன்பு... என்பதற்கு முன் உள்ள வரி... அப்படியே புரட்டிப் போடுகிறது... இரண்டாம் வரியின் அர்த்தங்களை...

டூ குட்...

பேரன்புடன்
ராகவன்

சி.பி.செந்தில்குமார் said...

உரை நடை புதுசா இருக்கு./ ஃபாலோயிங்

க.பாலாசி said...

ஆஹா... அற்புதம்.. என்னளவுக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது.

உம்ம பாக்கணும்னாலே இப்ப பயமா இருக்கு...

சத்ரியன் said...

பாலா,

படிக்கப் படிக்க வரிகளை விட்டகல மறுக்கிறது கண்கள்.

அழுத்தம்..அழுத்தம்...அழுத்தப்பட்ட சொற்பொதி. கை விட்டெடுக்க எடுக்க குறையாதது போலவே தோன்றும் மண்பானைக்குள் போட்டு வைத்த புளி போலான பொருள் சுரக்கும் சொற்கள்.

நான் கேப்பக்கூழ் காய்ச்சிக் கொண்டிருப்பவன்.

நீ புது செம்பவானி நெல்லரிந்து சோறு சமைப்பவன்.

சமைத்துச் சமைத்து ... கொட்டி வை பாலா.

கூழ் பித்துக் கூட்டம் பசியோடு உன் எழுத்துக்கள் தேடியலையும் நாள் வரும்.

ad said...

super...