கடலின் காதலன்

Saturday, October 30, 2010

இசை - வன்முறையின் பேருரு

நுனி கிள்ளிய சிமென்ட் வர்ண கந்தக நாவு கொண்ட மருந்தின் நெடி வீசும் நாட்டு வெடிக்கு தீத்துளியினை தின்னக்கொடுக்க தயாரான மனநிலை அல்லால் கொலையான உடல் போர்த்திய வெள்ளை துணி விலக்கி முகம் பார்க்க முனையும் நடுங்கிய கரங்கள் கொண்டே மைக்ரோ ப்ராசசர் மூளையாகிப்போன உடலுக்கு பிடித்ததான மெலடி இசைச்சலனங்களை பதிவேற்ற முயலுதல் கர்ண கொடூரமான ஒன்றாகிவிடுகிறது இந்த பொழுதுகளில் ..

முடுக்கிவிடப்பட்ட விசைக்கென எந்திரமாய் இயங்குதலில் இடைத்தொந்தரவு நுழைதலாய் வந்து சேரும் என் ப்ரிய இசை வன்முறையின் பேருரு . சீனக்கற்கண்டாய் உடைந்து கொட்டிய கண்ணாடித்துண்டகளுக்குள் இதயம் புரட்டி எடுக்கப்படும் அதி உன்னத காரியம் புரியும் மெல்லிசையின் கொடும் கரங்கள் . நீரில் ஆக்சிஜன் பிரிக்கும் கருஞ்சிவப்பு நிற செவுள் மூடிப்பிரிய தரை துடிக்கும் மீனென இடம் மாறி இடம் விழும்கிழிந்த சருமங்களில் ரத்தம் ஒழுகும் இதயத்தின் குரல்வளையை இரக்கமின்றி துடிக்க துடிக்க அறுக்கும் பெண் கரம் மெல்லிசை ..

இசையை உயிர்ப்பித்த பின் உருபெறும் பிரளய சூழ்நிலை. தீக்கங்குகளால் நிரம்பி வழியும் அறையின் மூலையில் உறைவேன் நான் முழங்கால் கட்டிய கைகள், கண்ணில் விரியும் நெருப்பு பிழம்புகளாலான அறை,உடல் நடுங்க அமர்ந்த வாறே . என்னைத்தின்னத் தொடங்கிய தீயின் பசிதீர்கையில் எஞ்சிய மீதத்தை சேகரம் செய்து கொள்கிறேன் பின் நாளைய இறத்தலுகாக....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடர் வனத்துள் சுரணையற்று திரியும்
எந்திர மிருகம் நான் ப்ரியமே
நிர்வாணமாய் ஓடச்செய்து நீ
சவுக்கால் அடித்ததில் மாறியவன்
இவன்
நாளையொருநாளில் உன் விஷம் கொஞ்சும் கண்களால்,
சயனைடு இதழ்களால் மறந்தேனும் தீண்டிவிடாதே .
என் பற்களாலேயே கிழித்துக் கொண்டு இறப்பதை
தவிர வேறு வழி இல்லை எனக்கு .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அன்பின் அண்ணன் ராகவனுக்கு ...

Tuesday, October 12, 2010

XXX பொம்மை

சிலை வடித்த தூமைக்குருதிக்கு
உறுப்பிழந்த மூடக்குறவன் நான்
விழிக்கு மாற்று இங்கே இதயம் ..

ரட்சிப்பவளின் கரங்களுக்கென நெய்து
வைத்திருந்த என்னை வெடுக்கென பிடுங்கி
பாவித்து வீசினாய் .. வேசலின் குளித்த
முப்பெருக்கல்குறியிட்ட பொம்மை இனி நான் .

ஒளி புக நடுங்கும் யாருமற்ற இரவில்
என் மீது வீசத்தொடங்குகிறது
நான் வெறுக்கும் கிகோலாவின் வாசனை !!!

Tuesday, October 5, 2010

பார்பி பொம்மையின் தோழி !!!

கழுகின் நகக்கால்கள் கைவிரல்களின் மடங்கில்
பெருகிநிற்கும் கரங்கள் கீறும் வேதனை
மிடறு விழுங்கி உடையும் குரலில்
உன் " Miss you "

தனிவெறுமை மகாசமுத்திர நினைவலைகளின்
நிசப்த பேரிரைச்சல் டெசிபல் அளவுகளின் எல்லை.
தாள இயலாதது ..

பார்பி பொம்மையின் தோழி; கிலுவைதளிர்
பாத தேவதையின் ஆசி பெற்றவன்
நாட்களை கொன்றபடியிருக்கிறேன் அன்பே ..

காத்திரு ..
.
.
.

டெடிபியர்களும், பார்பிக்களும் எனக்கான
"ப்பா" க்களை தின்று தீர்த்து கொண்டிருக்கின்றனவாம்

என்ன செய்ய ?? :((