கடலின் காதலன்

Saturday, October 30, 2010

இசை - வன்முறையின் பேருரு

நுனி கிள்ளிய சிமென்ட் வர்ண கந்தக நாவு கொண்ட மருந்தின் நெடி வீசும் நாட்டு வெடிக்கு தீத்துளியினை தின்னக்கொடுக்க தயாரான மனநிலை அல்லால் கொலையான உடல் போர்த்திய வெள்ளை துணி விலக்கி முகம் பார்க்க முனையும் நடுங்கிய கரங்கள் கொண்டே மைக்ரோ ப்ராசசர் மூளையாகிப்போன உடலுக்கு பிடித்ததான மெலடி இசைச்சலனங்களை பதிவேற்ற முயலுதல் கர்ண கொடூரமான ஒன்றாகிவிடுகிறது இந்த பொழுதுகளில் ..

முடுக்கிவிடப்பட்ட விசைக்கென எந்திரமாய் இயங்குதலில் இடைத்தொந்தரவு நுழைதலாய் வந்து சேரும் என் ப்ரிய இசை வன்முறையின் பேருரு . சீனக்கற்கண்டாய் உடைந்து கொட்டிய கண்ணாடித்துண்டகளுக்குள் இதயம் புரட்டி எடுக்கப்படும் அதி உன்னத காரியம் புரியும் மெல்லிசையின் கொடும் கரங்கள் . நீரில் ஆக்சிஜன் பிரிக்கும் கருஞ்சிவப்பு நிற செவுள் மூடிப்பிரிய தரை துடிக்கும் மீனென இடம் மாறி இடம் விழும்கிழிந்த சருமங்களில் ரத்தம் ஒழுகும் இதயத்தின் குரல்வளையை இரக்கமின்றி துடிக்க துடிக்க அறுக்கும் பெண் கரம் மெல்லிசை ..

இசையை உயிர்ப்பித்த பின் உருபெறும் பிரளய சூழ்நிலை. தீக்கங்குகளால் நிரம்பி வழியும் அறையின் மூலையில் உறைவேன் நான் முழங்கால் கட்டிய கைகள், கண்ணில் விரியும் நெருப்பு பிழம்புகளாலான அறை,உடல் நடுங்க அமர்ந்த வாறே . என்னைத்தின்னத் தொடங்கிய தீயின் பசிதீர்கையில் எஞ்சிய மீதத்தை சேகரம் செய்து கொள்கிறேன் பின் நாளைய இறத்தலுகாக....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடர் வனத்துள் சுரணையற்று திரியும்
எந்திர மிருகம் நான் ப்ரியமே
நிர்வாணமாய் ஓடச்செய்து நீ
சவுக்கால் அடித்ததில் மாறியவன்
இவன்
நாளையொருநாளில் உன் விஷம் கொஞ்சும் கண்களால்,
சயனைடு இதழ்களால் மறந்தேனும் தீண்டிவிடாதே .
என் பற்களாலேயே கிழித்துக் கொண்டு இறப்பதை
தவிர வேறு வழி இல்லை எனக்கு .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அன்பின் அண்ணன் ராகவனுக்கு ...

Tuesday, October 12, 2010

XXX பொம்மை

சிலை வடித்த தூமைக்குருதிக்கு
உறுப்பிழந்த மூடக்குறவன் நான்
விழிக்கு மாற்று இங்கே இதயம் ..

ரட்சிப்பவளின் கரங்களுக்கென நெய்து
வைத்திருந்த என்னை வெடுக்கென பிடுங்கி
பாவித்து வீசினாய் .. வேசலின் குளித்த
முப்பெருக்கல்குறியிட்ட பொம்மை இனி நான் .

ஒளி புக நடுங்கும் யாருமற்ற இரவில்
என் மீது வீசத்தொடங்குகிறது
நான் வெறுக்கும் கிகோலாவின் வாசனை !!!

Tuesday, October 5, 2010

பார்பி பொம்மையின் தோழி !!!

கழுகின் நகக்கால்கள் கைவிரல்களின் மடங்கில்
பெருகிநிற்கும் கரங்கள் கீறும் வேதனை
மிடறு விழுங்கி உடையும் குரலில்
உன் " Miss you "

தனிவெறுமை மகாசமுத்திர நினைவலைகளின்
நிசப்த பேரிரைச்சல் டெசிபல் அளவுகளின் எல்லை.
தாள இயலாதது ..

பார்பி பொம்மையின் தோழி; கிலுவைதளிர்
பாத தேவதையின் ஆசி பெற்றவன்
நாட்களை கொன்றபடியிருக்கிறேன் அன்பே ..

காத்திரு ..
.
.
.

டெடிபியர்களும், பார்பிக்களும் எனக்கான
"ப்பா" க்களை தின்று தீர்த்து கொண்டிருக்கின்றனவாம்

என்ன செய்ய ?? :((

Wednesday, September 22, 2010

கிரீன் டீ வித் நிலா

இன்று, 22 / 09 / 2010 - புதன், கீழை மலேசியா - அழகொழுகும் சபா , (SABA )

இந்த நடுக்கடலுக்கு அருகில் இருப்பது லபுவான் (LABUAN ) தீவின் துறைமுகம் .
இன்று நிலவு பார்த்தீர்களா நண்பர்களே ??
என் இருப்புக்கு அல்லது கடல் மட்டத்திற்கு ஏறக்குறைய 38 இலிருந்து 40 டிகிரி வரை இருக்கலாம் நிலவிருப்பின் கோணம் . இதை எழுதும் கணம் இன்னமும் அதிகப்படுத்தி கொண்டிருக்கலாம் தன் பாகையை.
அந்த நீல போர்வைக்குள் விழுந்திருக்கும் ஓட்டையில் நண்டு வாய்பிளப்பது போன்றான கறை , ஒருவேளை இப்படி நிகழ்திருக்கலாம் என்றோ ஒருநாள் அந்த நீல சல்லாதுணிக்கு பின்னால் இருந்த வெளிச்ச உலகிலிருந்து இப்பூமி துணியை துளைத்து கொண்டு விழுந்திருக்கலாம் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது போலும் இந்த ஓட்டை வழியே அவ்வுலகம் . காயம் துடைக்கும் விரவிய பஞ்சுகளை இல்லை பக்க வாதம் கண்டு இடப்பக்கம் வாயோடு கைகால் விளங்காமல் போன என் ஊர் உடையார் வீட்டு கிழவியின் நரை வெளுப்பை நியாபகப்படுத்தி கொண்டிருகிறது நிலவின் விளிம்பை கவ்வி துடைக்கும் டிஷு பேப்பர் மேகங்கள் . என் வரையில் திருமணப்பெண் முகத்தில் ஒளிர கிடைக்கும் நான் பெயரறிந்திரா அந்த பொன்னிற துணுக்குகள் உடுக்களாய் ஓரிரண்டு மட்டுமே எனக்கான இன்றைய வானத்தில் . பதினைந்து கிராம் கல்லுக்கே அதிர்ந்தலையும் தென்சீனக்குளம் மன்னிக்க தென் சீனக்கடல் .
எங்களுக்கென்றே சேவை செய்யும் கடலூர்திகள் தூரத்தே மினுக்கி கொண்டிருக்கிறது .

போனமுறை வானூரும் பயணத்தில் MH (malaysian hospitality ) இல் வாசிக்க கிடைத்த KK
(kota kina balu ) பற்றிய ஒரு கட்டுரையில் மலேசியா புகைபட கலைஞனின் ரசனை இப்படியாக வாசிக்க கிடைத்தது " என் பிறப்பிடம் என்ற வகையில் இவ்விடம் மீதான காதலை தவிர்த்து காதலிக்கவும் இருக்கிறது பச்சைதேநீர் கோப்பையுடன் என் வீட்டு வாயிலில் இருந்த படி மலையை குடிப்பது ."
சற்றுமுன் தேநீர் இடைவேளைக்கென Main deck (கப்பல் மேற்தளம் ) coffeeshop இல் Green tea யோடு நிலா தின்றதில் புலம்பி தொலைத்துவிட்டேன் இதை .
நம்ம ஊர்ல எப்படிங்க மழை பெய்யுதா? இல்ல நிலா தெரியுதா ?

Monday, August 9, 2010

மஞ்சள் குளவி உறையும் வீடு.


தெருக்கழிநீர் நெளியும் பொரிவடிவ
புழுவெனை எச்சில் செஞ்சாந்தில் வனை

எஸ்கிமோ குடிலினுள் கூம்பொத்த
பின்கொடுக்கில் விடம் வைத்து
கொட்டினாய் நீ என் மஞ்சள் குளவி !
விட போதையின் பேரின்பத்தில்
மஞ்சள் சிறகுகள் முளைத்து விட்டது
எனக்கும் !!.
@@@@@@@@@@@@@@
அன்று கழிவறை கதவிடுக்கில் பாதி உடல் நசுங்கிய வாகன விபத்தான மனிதனென செத்துக்கொண்டிருந்தது ஒரு பல்லி சந்தன வர்ண கண்ணாடி உடலில் ஒற்றை வெளிர் முட்டை தெரிய .பார்த்தேன் .பார்க்க மட்டும் செய்தேன். என் தனியறை கிழக்கு மேல் மூலையில் செம்மண் சாந்தில் நெய்யப்பட்ட குளவிக்கூட்டை உடைத்து போட்டேன் செத்து விழுந்தது வெள்ளைப்புழு.
"வேறெங்கெல்லாம் கூடு கட்டிருக்கு சங்கீதா" என்றழைத்தபடி வாசல் நிலை மரச்சட்டத்தில் இருந்ததை உடைக்க போனேன் . பதறி தடுத்தாள்.
ஜன்னலில் இரண்டு ,சாமிமாடம் அடுப்பங்கரையில் என ஒழுங்கற்ற அரைவட்ட மண் முட்டைகள் இட்டு அகதிக்குடியேற்றம் செய்திருந்தன குளவிகள்.
"எல்லார் வீட்டுலயும் இந்த கொளவி கூடு கட்டாது தெரியுமா? ரெண்டு தடவ அது கூடு கட்டுனத ஓடைச்சிட்டீன்னா இந்தப்பக்கமே வராது தெரிஞ்சுக்க . பாவம் ,துரோகம் "

"கொளவிக்கு வக்காலத்து வாங்குறியா நீ "

"சிலந்தி கூடு கட்டலைன்னு கட்டுன வீட்டையே வித்து போயிட்டாண்டா ஒருத்தன் " இடை நுழைந்தாள் வாசல் பெருக்கும் தயார் நிலையுடன் அம்மாவானவள் .
" ?!"
"சன்னாவூர் (சன்னாநல்லூர்) பக்கத்துல இடம் வாங்கி கட்டி குடியும் போன பெறகு வீட்டுல ஒரு பல்லி ,சிலந்தி இல்லைன்னு ஏதோ தோஷம்னு பயந்து கட்டுன வீட்டையே வித்துட்டு போய்ட்டாங்களாம் "
முட்டாள் தனத்தின் மொத்த குத்தகையான செயலுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கும் பேச்சு தொனி .
வாசல் பெருக்கும் சப்தம் . போய்விட்டிருந்தாள் .

அம்முட்டாள் தனம் மீதான சிரிப்பின் சப்தங்களை மூளை வாய்க்கனுப்பாமல் தின்று விட்டிருந்தது . மூடத்தனத்தின் செய்கைக்கு ஜால்ரா தட்டும் மனிதர்களின் மீதான கோபத்தின் வெப்பத்திலிருந்தும் கிளர்ந்து எழுந்து விட்டிருந்தது ஒற்றை இழை அந்த வீடு விற்றவன் மீதானது .
தனியுரிமை தனத்தின் வேர்கள் கிளைவிட்டிருக்கும் மாறிப்போன நான் இயங்கும் சுயநலமீன்கள் உலவும் சமுதாயத்தின் கிளைகளின் நுனியிலும் தன்னலத் தளத்திலிருந்தே மூடத்தனமான அம்முடிவு எடுக்கபட்டிருப்பினும் பயம் கலந்த அவ்வன்பிலும் கொஞ்சம் மனிதம் ஒட்டிக்கிடக்கிறதென்று மகிழ்ந்து கொண்டேன் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தேனூட்டும் மஞ்சள் சட்டைக்காரி

கூட்டிற்குள் அடைகாத்திருந்தாய்
உதிரம் முறித்து மெழுகு முலைகள்
புதைத்து தேனூட்டினாய்
வளர்சிதையும் மாற்றங்களை ரசித்தாய்
சிறகுகள் முளைக்குமென காத்திருந்தாய்
இறகுகள் குவிய குடைபிடிப்பேனென
ஏங்கியிருந்தாய்.
இறக்கைகள் முளைத்த தினவில் அடித்து
வீசிவிட்டேன் உன்னை ..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராணி சந்ததிகளின் அழிவுக்குப்பின் நேச விலங்கென்று எதுவும் வீட்டில் ஒட்டுதலாய் இல்லை . பெருமாள் நாயுடு ஞாபகார்த்த சின்னங்களாய் விட்டுப்போன அடிபம்பும் எண்ணெய் பிசுக்கேறிய கொல்லை வாசல் நிலைப்படியோடு ராணியின் வம்சாவளிக்காவல் நாய்களும் சேர்ந்திருந்தது . பழைய கெளப்புகடை வீட்டில் ராணி வம்சாவளிகள் இருந்த வரையில் கள்ள ,நல்ல பூனைகள் நடமாட்டம் இருந்ததில்லை அத்தோடு பால் புழங்கும் டீகடையோடான வீடும் பூனைகளை நல்லவைகளாய் இருக்கவிட்டதில்லை !. இப்போதான மாடி வீட்டு பரணை குத்தகைக்கு எடுத்திருக்கின்றன ஒரு ஜோடி புலிக்குடும்பப்பங்காளிகள் . குழம்பெனில் மீனும் ,இல்லையெனில் மோர்சாதம் மட்டுமே அவைகளின் பேவரைட் மெனு என்று அவைகளின் நாவுகளை படித்திருக்கிறாள் சங்கீதா . குழம்பு சாதம் சாப்பிடும் வரை காத்திருந்து தயிர் எடுக்க பிரிட்ஜை திறக்கும் தருணம் உணந்து ஹேர்பின்னென வாலை ஒடுக்கி கால் களை சுற்றியபடி "மியாவ்"களை ஒலிபரப்ப தொடங்குவதாய் ஆச்சர்ய செய்தி அறிவிக்கிறாள் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பூக்கள் பேசுவன.!. அடிகுவிந்து வாய்விரிய குழாய் ஸ்பீக்கர்கள் வடிவில் அவை இருப்பதற்கான காரணங்கள் அதுதான் போலும் . வெட்டாற்றின் கரையோர சீமை காட்டாமணக்கின் ஸ்பீக்கர் பூக்களின் பேச்சுகளை மறுஒலிபரப்பு செய்து கொள்ளுதல் அதிஉன்னதமானது .தொட்டு பார்த்தலிலேயே கண்ணிவிடக்கூடிய என்வரையிலான அனிச்சம் அவை. அதிலிருந்தோ என்னவோ குழாய்வடிவ இதழ்களற்ற மலர்கள் மீதான காதல் புதுவீட்டின் பூஜையறை ஜன்னலோரத்தில் சொர்ணபுஷ்ப கன்று நாடும் வரை விட்டிருக்கிறது .சொர்ணபுஷ்பத்தின் மஞ்சள் குழாய் பூக்கள் வாசமற்றவை அதற்கான பரிகாரமாய் வர்ணம் பீச்சுபவை .
பூக்க தொடங்கிவிட்டால் கூட்டிமாளாது.தன்னிடத்தை மலர்க்குப்பைகளால் அலங்கரிக்கும் காதலியின் சில்மிஷ
தொந்தரவுகள் அவை . அலைபேசி கோபுரங்களின் மின்னணு சமிக்ஞை களுக்கு தப்பிய ஏதோவொரு தேன்சிட்டு இலைகளை தொன்னையாக்கி சொர்ணபுஷ்ப செடியில் குடி புகுந்திருப்பதாய் சங்கீதா தொலைபேசுகையில் சொன்னாள். பிறகான நாட்களில் என் தொலைபேசும் குசலவிசாரிப்பு தருணங்களில் ஒரு கணத்தை பிடித்துக்கொண்டுவிட்டது தேன்சிட்டும் அதன் கூடும் .
வீடு திரும்பலின் பின் .அடிக்கடி பார்த்தல் , பிரவுன் புள்ளிகள் மேவிய முட்டைகளை எண்ணுதல் , ரசித்து குதுகாலித்தல் தனமான என் சிறுபிள்ளை தொந்தரவுகள் அக்குருவியை பெரிதாய் இம்சித்து விட்டது போலும் .பிறகொரு நாளில் பிய்ந்து தொங்கிய நார் கூட்டில் முட்டைகளை காணவில்லை .ஒருவேளை ஓணானோ வேறெதுவோ அதை தின்றிருக்க வேண்டும் அல்லது குருவி இடம் பெயர்ந்திருக்கவேண்டும் . மொத்தத்தில் குருவி இனி இல்லை .
"இப்போ திருப்தியா?" சங்கீதா
":( :( " நான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வெறுமை நிரம்பும் கூடு

உயிர்கள் சூழ இருத்தல் கிடைக்கப்பெறுவது ஆசிர்வதிக்கப்பட்டது .செய்நேர்த்தி புரியும் ஸ்பைடரின் எச்சில் சித்து விளையாட்டுகள் பட்டுபூச்சிகளும் அறியாதவை .பட்டு பூச்சியினும் சிலந்திகளை ரசிக்க தொடங்கிவிட்டேன் சில நாட்களாய் . பிறகொரு மதியத்தில் மஞ்சள் குளவி பற்றியான எங்கள் பேச்சு திரும்பியதில் அது கூடு காட்டும் செயல் முறையை டெமோ எடுத்தாள் சங்கீதா . முன் கைகளை அசைத்து மண்ணோடு எச்சில் பிசைந்து பூசுவதாய் அவள் வாய்முன்னே கை அசைத்து செய்து காட்டலில் நகைத்து கோபம் சம்பாதித்து கொண்டேன் .
சிறகு வளர்ந்து பறக்கும் வல்லமை பெற்றுவிட்ட நாளில் தானே துளையிட்டு வெளி வந்து பறந்துவிடுவதாய் துளையுள்ள கூடுகள் அனைத்தும் குளவிகளற்று இருப்பதை உடைத்து காட்டினாள்.கர்ப்பம் சுமந்த கூடுகளின் வெறுமை காண சகியாததாய் இருந்தது .
வரும் செப்டம்பர் மூன்றில் சங்கீதாவிற்கு திருமணம் ,அன்றிலிருந்து இதே வெறுமையை சுமக்க தொடங்கிவிடும் என் வீடும் ...............

Friday, July 16, 2010

பரத்தி உலவும் கடல்

கண்ணம்மாக்களுக்கு கண்ணன்களும் ,யட்சிகளுக்கு யட்சன்களும் தோன்றிய படியே இருக்கிறார்கள் இப்புவிப்பந்தில் ( அல்லது ) கண்ணன்களாகவும் யட்சன்களாகவும் மாறியபடி இருக்கிறார்கள் . தேவதைகள் (கண்ணம்மா,யட்சி என்று கொள்க ) வானிலிருந்து கொடிபிடித்து இறங்கி வருவதில்லை .யுகாந்திரங்களாய் அதே இளமை பச்சையத்தொடு இங்கேயே இயங்கியபடி இருக்கிறார்கள். தேவதையின் வர்ணம் சொட்டும் இறகுகளால் ஆசிர்வதிக்கப்படுதல் அற்புதமானது அது கண்ணம்மாவை முதல் தரிசனமுரும் உன்னத கணமாகவும் இருக்கலாம் .!!
-----------௦- 0 ------------
கடல் .
மூன்றெழுத்து சோடியம் குளோரைடு பிரம்மாண்டம் .
தலை கால் முளைத்திராத (அ ) புரியாத விலங்கின நீர்மம் .
பவளப்பாறையையும் ,எரிமலையையும் ஒரேவயிற்றில் சுமக்கும் மகாகர்ப்பம்


சிலுவைகள் உலவும் கிருத்துவ கடற்கரையில் முதல் தரிசனத்தை எனக்கு தந்து விட்டிருந்தது கடல்.
ஞாபக சிக்கலின் பின்னலிலிருந்து உருவி எடுக்கிறேன் முதல் பார்த்தலை .மழித்த தலையோடே முதல் கூடலைத்தொடங்கினேன் ஒரு மதியத்தில் . அந்த தீண்டலின் தீட்டே இன்றுவரை எனை பீடித்து நிற்கிறது.
தன் ஜீன்களை புதைத்தனுப்பும் தாத்தன்களின் வேலை செய்யும் எந்தவொரு பிரபஞ்ச இயற்கைக்கும் இருந்திரா சக்தி ஆழிக்கு.
ஒருகல் உப்பில் உறைந்திருக்கிறது கடல்.
செம்படக்கிழவியின் கூடை மீன்களின் ரப்பர் விழிகளில் விரிகிறது மகா சமுத்திரம் .
உடல் தனியே ;இயங்கிக் கொண்டிருக்கிறது நுரையீரல் . சங்கு. இன்னமும் ஊதிக்கொண்டிருகிறது கடல் மூச்சை. இதெல்லாம் சரி எனக்குள் ஏன் வந்து உறைந்தது கடல் ???.
***************************************************************
பிறகு ஒரு நாளில் கண்ணம்மாவுடனான நட்பு நட்பின் எல்லையை கடந்திருக்கலாம் . கண்ணம்மாவின் சிருஷ்டி தன்மை விசித்திரமானது . உங்களுக்காக அவளா அல்லது அவளுக்காக நீங்களா என்ற குழப்பத்தில் ஒருநாள் நீங்கள் தொலைந்து விடக்கூடும் அவளினுள். கேட்டு பெறவேண்டிய அவசியம் அவளிடம் உங்களுக்கு நேராது. என்றோவொரு ம"ரண" தினத்தில் அவளை நீங்கள் கொலை செய்துவிடக்கூடும்!!!. பின் இரத்தக்கறைகளோடு முகத்தறைந்து கொண்டழும் உங்கள் கண்ணீர் துடைத்து தேற்றிக் கொண்டிருப்பாள் கண்ணம்மா !!!!!!
*********************************************************************************************************
கடல் புழங்கத் தொடங்கி இத்தோடு ஏழு வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது .தோலோடு சேர்த்து இதயமும் பழுப்பு உப்போடு உரமேறியாகிவிட்டது. கடலாடும் பரதவர்க்கு இணைநான் இல்லையென்றாலும் கடல்சார் மாற்றங்கள் எப்படி இல்லாமல் போய்விடும் . அரக்கூர்கள் மேல் நடக்க பயிற்றுவித்து மலரா முகையிடம் காயப்பட பழக்கிவிட்டது நன்றாகவே . முப்பத்து மூன்று சதவிகித (அதுவல்ல) குணக்கலப்பீட்டில் நான் என்பது பைத்தியக்கார மிருகக்குழந்தை .
சகல வசதிகளோடு மிதக்கும் " பாஸ்கல் நிலைமம்" . மூடவும் திறக்கவும் கதவுகளுக்கு புறவிசைத்தேவைப்படா "பிட்சிங்களும் ரோலிங்களுமாய்" சீறிக்கொண்டிருக்கிறது சர்ப்பக்கடல். கப்பல் மேல்தளத்தை வந்து நக்கிவிட்டு போகிறததன் நாக்கு .புணர்தலாடும் கிறக்கத்தில் எவ்விக்குதிக்கிறது நாற்புறமும். மூச்சின் சீற்றம் .பேரிரைச்சலின் இந்த மரண மௌனத்தை நீங்கள் பருகியதுண்டா ?? என் தியான பீடம் இது !!! . ஓங்கார மௌனத்தின் சப்தத்தில் செத்துக்கொண்டிருப்பேன் நான் பின் புறக்கப்பலில் ...
மண் பார்த்தல் ? அழகு .மலை பார்த்தல் ? ம் அழகு . மழையோடு மலை பார்த்தல் ? ம்ம் அழகோ அழகு என்றே கொள்ள .கடல் பார்த்தல் பேரழகு , இறையழகு . கடலிலிருந்து கரைசேர்வதற்கு முன்பான கரை பார்த்ததுண்டா ? நெடு நீண்ட பிரிதலுக்கு பின் காதலி/மனைவியின் கண் பார்த்தவர்களுக்கு முந்தைய கேள்வி தேவை இராது .
அதே கடல் அதே இடம் நேற்று விட்டுப்போன அந்தப்பழைய கடலை காணவில்லை !! தினத்திற்கு தினம் புதியவளா நீ ? இந்த மார்கண்டேய மினுமினுப்பு எங்கிருந்து வருகிறது உனக்கு ? மாற்றி மாற்றி அலை சீவிக்கொள்ளும் சிகையலங்காரப்ரியையா நீ ??
இனி நீங்கள் சிரித்துக்கொள்ளலாம் (??)
சில நாட்களாய் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறேன் கடலோடு .கண்ணால் தின்று தீர்த்தபின்னும் பசி பசி என்றலறிக்கொண்டிருக்கிறது ஓநாய் வயிறோடு நான் .அழுகையையும் ரணங்களையும் பரிசாய் ஈந்தபடி பேசிக் கொண்டிருக்கிறேன் அவளோடு. அழும் ஆணை பெரும்பாலும் பெண்களுக்கு பிடிப்பதில்லை என்று எவளோ சொன்னதை நமுட்டு சிரிப்போடு நினைவு கூர்கிறேன் . அழும் என்னைத்தான் பிடித்துவிட்டிருக்கிறது இவளுக்கு ...

**********************************************************************
கண்ணம்மாக்கள் உடல் ஏறி வருவதில்லை இல்லை இல்லை கண்ணம்மாக்களுக்கு ஸ்தூல உடல் தேவைப்படுவதில்லை .தீராத ஒரு வாதையின் குறியீடு கண்ணம்மா .தீர்க்கவியலா உணர்ச்சிகளின் வடிகால் கண்ணம்மா , துயரங்களின் சுமைதாங்கி கண்ணம்மா . நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழமுடியா நிகழ்வுகள் கண்ணம்மாக்களால் நடப்பவை. கண்ணம்மாக்களும் நீங்களும் அல்லது நானும் இருப்பது தனிப்ரபஞ்சம் வண்ணத்துப்பூச்சிகள் தேனெடுக்கும் பருவத்து மலர்களால் நெய்யப்பட்ட பிரபஞ்சம் . கனவுலகின் எல்லை கண்ணம்மா .எல்லாமும் அவளே . கண்ணம்மா எனக்கு கடல் . கடல்! கண்ணனம்மா!! கடல். !!
இதோ அலைக்கொங்கைகள் புடைக்க மோகத்தில் விம்முகிறாள் என் கடற்காதலி கண்ணாம்மா !!
கண்ணம்மா !!!!!


Sunday, July 11, 2010

கடலாடி

கருத்த உடல் வெளிர்தேமல்கள் பேராழியின்
குறைஆழ ஓவியப்பிரதேசங்கள் ..

மஞ்சள் அலகு நீருறைப்பறவைகள் நிகழ்த்தி
காட்டும் பெருமீன்களுக்கு தப்பி திகில் நாடகம்

அலைதலைகளை கொய்துவிடுகின்றன
சுக்கான் வழிநடக்கும் புரப்பெல்லர் இறகுகள்

கட்டளைகள் ஏற்றுவித்து உலோக முலாம்
பூசப்படுகின்றன இயங்கும் மூளைகள்

இயந்திர மிருகமான கடலாடியென் முலாம்
படர்ந்த மூளையை அரிக்கத் தொடங்குகிறது
நாட்காட்டி நிர்வாணப்பெண் நிழற்படம் ..........

Wednesday, June 23, 2010

மகாதனிமையில் சிதறும் கணம் !!

அன்பின் பெருநதி சுழித்துக்கொண்டோடும்
நிழற்பட பரப்பில் ..
ஹைபிஸ்கஸ் மலரின் ஒற்றைக்கோட்டு
ஓவியமென பறக்க எத்தனிக்கும்
நீர் பறவைகளின் கடற்பின்புல நிழல் .
விளம்பர செயல் மாதிரி காதல் இணை
உதடுகள் வழுக்க ஒன்றன் மேல் ஒன்றென .
விழிக்கோள ஆடியில் விழுங்கும்
எனக்கு ஏன் வலிக்க வேண்டும்
பெருந்தோளும் இதயமும் . ??


Sunday, June 20, 2010

அவனுக்கு

எச்சில் டம்ளர் கழுவியே ரேகை அழிந்தவனுக்கு
கழுவிய நீரிலேயே எதிர்காலம் தேடியவனுக்கு
வெந்நீர் ஆவியில் விடியலைக்கண்டவனுக்கு
சிகரெட்டில் வெந்த உதட்டுக்காரனுக்கு
சாராயத்தில் திளைப்பவனுக்கு
கடைச்சுவர்களுக்குள்ளேயே உலகம் கண்டுவிட்டவனுக்கு
புத்தகப்பையோடு என்னை வெள்ளநீரில் சுமந்தவனுக்கு
உழைக்க அஞ்சாதவனுக்கு
என் கோபத்தையும் ரசிப்பவனுக்கு
என் மூடத்தனத்தை பரிசளித்தவனுக்கு
ஒன்றுமறியா வெகுளித்தனக்காரனுக்கு
எனக்கான ஒற்றைக்கருவிற்கு ஓராயிரம் உயிரணுக்கள் ஈந்தவனுக்கு !
அவனுக்கு !
எங்கப்பனுக்கு !
..
அடேய் !! நரைத்த தாடிக்காரா மீசை துளிரா பருவத்துள் மீண்டும் நான் நுழைந்து உன் உள்ளங்கை சூட்டோடு உலகம் சுற்ற வேண்டுமடா !!!

நண்பர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்

Wednesday, May 19, 2010

??????????????????????????????????

அக்னிப்பாலையின் இரவு நிலவின் ஒளியூற்றி இறுக்கும் உனக்கான சொற்களில் மோகத்தின் பிம்பம் .ஜன்னல் ஊடித்திரும்பும் நிலவில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் உன்னுருவம் .பின்னாட்களில் உன்னை புணர்வேன் காதல் பொய்யின் பெயரால் .உனை தின்பதற்கான எனை தயாரிக்கும் உன் சொற்களின் காதலில் காமத்தை மட்டுமே வழித்தெடுக்கும் என் மிருகம் . பிரிவின் புவியியற் தொலைவின் இடைவெளி பிரதேசங்களை நீ மட்டுமே நிரப்புகிறாய் அன்பூற்றி பொய்யன் எனக்கு .
உன் வயிற்றின் சுருக்க வரிகளில் எழுதப்பெற்றிருக்கும் அவனின் காதலுக்கு நிகரில்லா இச்சுயனலமியின் மீது உனக்கெதற்கு நேசம் ???. தயவுசெய்து என்னிடம் முத்தத்தில் காதலை எதிர் பாராதே எனக்கு தேவை நீ என்னும் உடல் ..
பசிக்கலையும் தெருவிலங்கின் குணாதிசயம் நிரம்பிய எனை உனக்கு துலாக்கோலிடாதே !!. ஒரு குரூபிக்கு காதலை பரிசளிக்கிறாயே உன் தெரசாதனத்தை என்னவென்று சொல்வது . அடி பையித்தியக்காரி.........................


Friday, April 2, 2010

ருத்ராபதி ஆசிரியர்


உன்மத்தம் பீடித்தநிலை இறைதரிசன அணுக்கமென்றே விழைகிறேன் .வாழ்வின் அந்திமகால வாசலிலும் பற்றியும் பற்றா குடுவையுள் ரசத்தன்மை எளிதில் யார்க்கும் வாய்ப்பதில்லை.அந்த பித்து பிடித்த மனிதனோடு கொண்டாடுவதில் நானும் பித்தனாவதில் மகிழ்ச்சியன்றி வேறென்ன?
ருத்ராபதி ஆசிரியர் இறந்தாரெனும் செய்தியின் நிதர்சன வலி இன்னமும் சிறிதளவேனும் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது .
எனக்கான இறைதேடல் சிற்பங்கள் அறையப்பெற்ற கோயில்களில் இல்லைதானென்றாலும் அதன் சப்த அதிர்வுகள் ,வாத்தியங்களின் ஒலியமைதி , மதில்களுக்கப்பாலேயே தீண்டாமை சாபம் பெற்ற நகரிய இரைச்சல் மாசுகளுக்கென்றே பொழுது போக்கின் தலமாக கோயில்களை நான் தேர்ந்ததில் ஆச்சர்யமொன்றுமில்லை . பார்க்கலாமங்கே ஆசிரியரை ஒற்றைப் பச்சைத்துண்டு என்றோ சால்வைஎன்றோ தெரிய மார்புவரை கட்டிய அவ்வொற்றை ஆடையில் நீறு பட்டையில் தேவாரம் , அருட்பா,அந்தாதியுடன் .
இதென்ன காதேலென்று தெரிவதில்லை முழுமூச்சாய் பாடலை மனனம் செய்து சிலைமுன் மன்னிக்க கடவுள் முன் கொட்டித்தீர்த்தல் .இதுவென்ன? என்னிடமும் புத்தகத்தோடு சரிபார்க்க சொல்லி ஒப்புவித்தாலும் கிடைக்கப்பெறும் அதிசயம் !. அவரோடான நட்பியம் எழுத்தென்ற
புள்ளியில் தான் நிகழப்பட்டிருக்கவேண்டும் .அரைகுறையாய் வாசிக்க தொடங்கிய காலங்களில் ( இப்ப மட்டும் ??? ) எழுத்தின் கிளர்ச்சியில் புணரும் வேட்கையொத்த எங்கேனும் பகிர்ந்து தீர்க்க வாய்க்கும் மனம் அவரானது .இந்த நேர்கையில் வறுமைக்கு பண்டமாற்றாய் மதமளிக்கும் பறங்கிய மதவியாபாரிகள் போல் என்னுள் அருட்பா திணிக்கும் சாமர்த்தியம் மெச்சத்தக்கது.பொதுவில் விடய அரட்டை தருணங்களில் எதிர்வாதம் செய்ய எவ்வொருவரையும் அவ்வளவு எளிதில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை . இவ்விடயத்தில் நான் நேசிக்கும் முட்டாள் தனம் மிகும் மனிதர் நிற்க.
தனிமைக் கொடும்முயக்கம் பெற்று உப்புத் தென்றலில் மரத்த உடலோடு கடலோடியாய் சிதைமாறிய பின் வீடு திரும்பும் நாட்களிலும் தனிமையோடான விபச்சாரத்திற்கென்றே அலையத்தொடங்கி வறண்ட நன்செய் நிலங்களில் பித்தொடு திறியும்தருணங்களிலெல்லாம் அவரைக்காண நேரும் தரை மேயும் மாட்டின் தும்போடு அதே பாசுரங்கள் ,மனனம் இத்தியாதி இத்யாதிகள்.
எம் .ஏ தமிழ் படித்து தலைமையாசிரியராய் ஓய்வு பெற்ற பகட்டு வேடம் பூணா அக்குழந்தைமை குணாதிசயத்திற்கென்றே மனைவி அமைந்தது :((
அம்மாவும் (அம்மாக்களின்) பழைய வருத்த சுய புராணங்களின் ஊடே சொல்லியிருக்கிறாள் ருத்ராபதி ஆசிரியரின் இளமைகால துன்பியல் நிகழ்வுகளை.
குரூரமும் ,கயமையும்,வேசித்தனமும் மிகும் எதையோ விழாமல் பற்றிகொள்ளும் பிரயத்தனமாய் இறுக்கமான யதார்த்தவாதிகளின் கேலிப்புன்னகை அதியதார்த்த அப்பித்து நிலை மனிதன் மீது வீசப்படும் நிகழ்வுகளில் நினைத்து கொள்கிறேன் எனக்கான இப்போன்ற கேலிச்சிரிப்பு உங்கள் உதடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று அந்நாளுக்கான கொண்டாட்டங்களை சேமித்தபடி.
அவரின் இடுகாட்டு பயணத்திற்கான ஒரு தோள் எனக்கானது சுடுகாட்டு சாம்பல் பொட்டலில் இறக்குகையில் தோளோடு சேர்த்து வலித்தது. ச்சே!இந்த பாழாய் போன கண்ணீர் சொட்டேனும் வரமறுக்கிறது...
இனி யாளியின் நாவை வெண்கலத்தில் கொண்ட ஆலயமணியதிர்வு நினைவுறுத்தும் அப்பரையும் ,பட்டரையும்
வள்ளலாரையும் அவ்வாசிரியக்குரலோடு !!!!!

Sunday, March 7, 2010

கொலைநிகழ்த்துதல்!

வனமுறை புலியின் தந்த வடிவ பற்களின்
காவி நிறத்தில் ஒளிந்திருக்கிறது மான்
இரத்த வீச்சம் ..........
இதழில் ஒழுகும் குருதியை துடைத்தபடி
நிற்கிறேன் பழுப்புநிற மிருகக்கண்கள்
சுமந்தபடி கொலைவெறி மிக ...
நாசுழற்றி மிருகமிளைப்பாற .
"நான் " துடிக்கிறது இறந்துகொண்டிருக்கும்
பிரியத்தை ஏந்திய படி .
இமைதுடிக்க !!உயிர் இருக்கிறது
ஓடிக்கொண்டிருக்கிறேன் எங்கோ !

Saturday, February 27, 2010

நார்சிச நாயகி!!!!!!!!!!!!!!!!!!

செம்புலப்பரப்பகழ் கிழங்கென பிரசவித்த
ப்ரியமெனும் தூயம் உனக்கேயானது ..

முலையூட்ட நாவறண்டழும் குழந்தைஎனும்
நானுக்கு
கிளாவர் கிலுகிலுப்பை நீட்டும் மரக்கரம் உனது.

பிரேதம் சூடி செருப்பு காலுக்குள் உடல் நசுங்க
தீர்ப்பிடும் கோல் உன்னது .

வியந்து கொள் நார்சிச நாயகி!!!! இதெற்கெல்லாம்
சேர்த்தழும் எவன் கையும் துடைக்கவியலா
உன் கண்ணீர் உனக்கேயானது .....


"" எதிர் பார்ப்பின்றி அள்ளித்தரும் நேயம் கபடறியாதது தோழி "" நேசமித்ரன்

Thursday, January 14, 2010

ஒருநாள் (கள்)!!

ஒருநாள்

தார்ச்சாலை நான்முனை சந்திப்பின்
மஞ்சள் விளக்கு சமிக்ஞையாய்
நகர்த்தி விட்டிருக்கிறோம் நாட்காட்டி
தினங்களை !!!

.
பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆதிமனித உணர்ச்சிகுறிப்புகள்

.
பாண்டி ஆடும் சிறுமி கைசிறகடித்து
மையநோக்கு விசை சமன் செய்யும்
வித்தை பழகி நிற்கிறேன் நமக்கான
ஒற்றை நூலிழைமுன் ...

................................................................................................................
இன்னுமொரு நாள்

மீட்டு நம்மிடை ஒற்றை
வயலின் இழையை
ஒவ்வொரு மீட்டலுக்கும்
பொடிந்து கொட்டுகிறது
இதயம்


...............................................................................................................
மற்றுமொருநாள்

தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !


...............................................................................................................
குறிப்பு :
மேற்கண்டதில் முதற் கவிதை(?) அந்த ஒற்றை நூலிழை முன் தள்ளாடி கொண்டிருக்கும் மாப்பி செய்யதுக்கு !!..
தலைப்பில் இலக்கண பிழை இருப்பின் மேன் மக்கள் மன்னிக்க .......

Wednesday, January 6, 2010

பெருமெளனம்..

கன்னமயிர்களுள் ,சிகரெட் தின்ற உதட்டினுள்
புறக்கைகளில் முகலாயப் பெருங்கண்ணீர்
முத்தங்கள்.

ஆக்டோபஸ் கரங்களால் இரவெனை
கற்பழித்த நாட்களின் கொடூரம்

கழிவறை கண்ணாடியில் தெரிகிறது
கொலைவெறி மிகுந்தவென் கண்கள்

அவளருவத்தை புணர்ந்து தீர்த்த
திருப்தியில் நிகழ்த்தத்தொடங்குகிறேன்
பெருமெளனம்..

மச்சநிறம் மொழியின் வளைவுகளாய்
அவள் பெயர் நீண்ட கரத்தில்
அறுந்த தமனி வழி கசிகிறது
அவளோடு ஹீமோகுளோபின் திரவம் ..........

பி.கு
அப்பாடி......................(பெரு மூச்சு )
இது "உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு " நடத்தும் " உரையாடல் கவிதைப் போட்டி" க்காக எழுதியது