அண்டத்தின் நிசப்த இறகின்
மீட்டலால்மௌனம் நிரம்பிப்
பொங்கும் அறையில் மெல்லிய
கலங்கல்
வெப்பத்தென்றலைத் துப்பும்
மூன்றிறகு மின் விசிறி ,
மஞ்சள் எச்சில் உமிழும்
விடிவிளக்கு.
பூமிக்கருவின் சூர்ய நாவுகளை
மேற்சுவர் தரை தடவும்
மழையால் தணிக்க இயலுமா????
நிகழ்த்த முயன்று கொண்டிருக்கிறது
இயந்திர விசிறி !!!!!!!!
தீயை விழுங்கியவனை (அல்லது )
தீயால் விழுங்கப்பட்டவனை
எதிர்பாலற்ற தனிமை இரவின்
கொடுமைப்பிடி .
எரிகிறேன் உள்ளும் புறமும்
காதுமடலேறிய இரத்தமும்
காய்ந்த உதடுகளும் யாசிக்கின்றன
எதையோ என்னிடம் (!)
பிச்சையிட வழியற்றவனாய்
நான் .
இளமை மீட்டும் ராகத்திற்கு
வார்த்தை கோர்க்க இயலாமல்
கெஞ்சுகிறேன்
காலத்திடம்
என் இளமையை தின்றழி ,
இல்லையேல்
யாசிக்குமங்கங்களை முடமாக்கு ,
இயலாவிடில்
தயவு செய்து
எனைக்கொன்று விடு ............................